பஞ்சாப் மந்திரி சபை விரிவாக்கம்

சண்டிகர், செப்.26-
பஞ்சாபில் முதல்வர் சரண்ஜித் சன்னியின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
சமீபத்தில் பஞ்சாப் முதல்வர் பதவியில் இருந்து அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். இதனையடுத்து சரண்ஜித் சன்னி முதல்வராக பதவியேற்று கொண்டார். இதனை தொடர்ந்து, அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ராகுலுடன் சரண்ஜித் சன்னி ஆலோசனை நடத்தினார். காங்கிரஸ் மூத்த தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தினார்.
இதனை தொடர்ந்து சண்டிகரில் நடந்த விழாவில் 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இன்று பிரம் மொகிந்திரா, மன்ப்ரீத் சிங் பாதல், ராஜிந்தர் சிங் பஜ்வா, சுக்பிந்தர் சிங் சர்காரியா, ராணா குர்ஜித் சிங், அருணா சவுத்ரி, ரஜியா சுல்தானா, பாரத் பூஷண் அசு, விஜய் இந்தர் சிங்லா, ரன்தீப் சிங் நபா, ராஜ் குமார் வெர்கா, சங்கீத் சிங் கில்ஜியான், பர்கத் சிங், அமரீந்தர் சிங் ராஜா வரிங், குக்ரிரத் சிங் கோட்லி ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.
பிரம் மொகிந்திரா, பஞ்சாப் காங்கிரசின் மூத்த தலைவர் ஆவார். அமரீந்தர் சிங்கிற்கு முன்னர் கட்சியில் இணைந்தவர். அமரீந்தர் அமைச்சரவையில் உள்ளாட்சி துறை அமைச்சராக பதவி வகித்தார். நபா, வெர்கா, கில்ஜியான், பர்கத் சிங், வரீங் மற்றும் கோட்லி ஆகியோர் புதிதாக அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளனர்.
முன்னாள் முதல்வர் பியாந்த் சிங்கின் பேரனான கோட்லியை அமைச்சரவையில் சேர்ப்பதற்கு, அம்மாநில எதிர்க்கட்சிகளான சிரோன்மணி அகாலிதளம் மற்றும் ஆம் ஆத்மி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கடந்த 1994ம் ஆண்டு பிரான்சை சேர்ந்தவரை கடத்தி மானபங்கம் படுத்தியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 1999ம் ஆண்டில் விடுவிக்கப்பட்டவர் கோட்லி.
ராணா குர்ஜித் சிங், அமரீந்தர் சிங் அமைச்சரவையில் இடம்பெற்றவர். ஆனால், நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக குற்றச்சாட்டு எழுந்ததால், கடந்த 2018 ம் ஆண்டு அவரது பதவி பறிக்கப்பட்டது. பஞ்சாப் பணக்கார எம்.எல்.ஏ.,க்களில் இவரும் ஒருவர் ஆவார். இவரை அமைச்சரவையில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 6 எம்.எல்.ஏ.,க்கள், மாநில காங்கிரஸ் தலைவர் சித்துவிற்கு கடிதம் எழுதியிருந்தனர்