பஞ்சாப் மாநிலத்திற்கு துப்பாக்கிகளை விநியோகம் செய்த இரண்டு பேர் கைது

அமிர்தசரஸ், செப். 3-சட்டவிரோத ஆயுதக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த இரண்டு பேரை பஞ்சாப் மாநில போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். அவர்கள் மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தைச் சேர்ந்த போரெலால் என்ற மனிஷ் மற்றும் புர்ஹான் மாவட்டத்தை சேர்ந்த கைலாஷ் மால் சிங் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பஞ்சாப் டிஜபி கவுரவ் யாதவ் தெரிவித்தார்.
அவர்களிடம் இருந்து 55 கைத்துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு வல்லா மண்டி ரயில்வே கேட் பகுதியில் நான்கு கைத்துப்பாக்கிகளுடன் இரண்டு பேரை அமிர்தசரஸ் பிரிவு காவல்துறை கைது செய்தது.அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​அந்த ஆயுதங்களின் உற்பத்தியாளர் மற்றும் விநியோகிஸ்தர் மத்திய பிரதே மாநிலம் புர்ஹான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்ததாக கவுரவ் குறிப்பிட்டார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் இந்தர்தீப் சிங் தலைமையிலான 15 பேர் கொண்ட குழு மத்திய பிரதேச மாநிலத்திற்கு சென்றதாகவும் அம்மாநில புலனாய்வு காவல்துறை உதவியுடன் நடத்திய தேடுதல் பேட்டையில் இந்த இரண்டு ஆயுத விநியோகிஸ்தர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார். தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், மேலும் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு ஆயுத விநியோகஸ்தர்கள் கைது மூலம், பஞ்சாப், மத்திய பிரதேச மாநிலங்களுக்கு இடையே நீண்ட காலமாக நடைபெற்று வந்த சட்டவிரோத ஆயுதக் கடத்தலை பஞ்சாப் காவல்துறை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.