படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்

புதுடெல்லி, அக். 31-‘வந்தே பாரத்’ ரயில்களில் படுக்கை வசதி கிடையாது. இருக்கையில் அமர்ந்து மட்டுமே பயணிக்க முடியும். இந்நிலையில், படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்களை அறிமுகம் செய்ய ரயில்வே முடிவு செய்துள்ளது.இதன்படி, சென்னையில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎப்) படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த புதிய ரயில்களில் குளிர்சாதன வசதி இருக்காது என்று கூறப்படுகிறது. மேலும் புஷ்-புல் முறை அதாவது ரயிலின் இரு முனைகளிலிருந்தும் ரயில்களை இயக்க அனுமதிக்கும் ஒரு கட்டமைப்பு இதில் இருக்கும். இந்நிலையில், படுக்கை வசதியுடன் கூடிய ஒரு வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டத்துக்கு தயாராகி விட்டதாகக் கூறப்படுகிறது. அந்த ரயில் சோலாப்பூரிலிருந்து மும்பை செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த புதிய ரயிலுக்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக பெயர் சூட்டப்படவில்லை என்றாலும், சமூக வலைதளவாசிகள் அதை ‘வந்தே பாரத் சாதாரண்’ என அழைக்கின்றனர். மூன்று வெவ்வேறு தொழில்நுட்பங்களில் 400 படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.