படைகளை ‘வாபஸ்’ பெற சீனா மீண்டும் முரண்டு


புதுடில்லி, ஏப். 19- லடாக் எல்லையில், ‘ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா, தெப்ஸாங்’ ஆகிய பகுதிகளில் இருந்து, படைகளை திரும்பப் பெற சம்மதித்த சீனா, தற்போது படைகளை திரும்ப பெறாமல் முரண்டு பிடிப்பதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.
லடாக் எல்லையில், கடந்த ஆண்டு, சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, எல்லையில் கடும் பதற்றம் ஏற்பட்டது. இந்தியாவும், சீனாவும், எல்லையில் படைகளை குவித்தன. பதற்றத்தை குறைக்க, இரு நாடுகளின் ராணுவ கமாண்டர்கள் அளவில் பேச்சு நடத்தப்பட்டது. ஒன்பதாவது சுற்று பேச்சில் சமரசம் ஏற்பட்டு, லடாக் எல்லையின் பாங்காங் ஏரியின் வடக்கு கரையிலிருந்து, படைகளை இரு நாடுகளும் திரும்பப் பெற்றன.
இதன்பின் நடந்த, 10ம் சுற்று பேச்சில், கிழக்கு லடாக்கில், ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா, தெப்ஸாங் ஆகிய இடங்களில் குவிக்கப்பட்டுள்ள சீன படைகளை திரும்பப் பெற, இந்தியா வலியுறுத்தியது. இதற்கு சீனா சம்மதித்தது. இந்நிலையில், கிழக்கு லடாக்கின் ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா, தெப்ஸாங் ஆகிய பகுதிகளில் இருந்து, படைகளை திரும்பப் பெற, சீனா முரண்டு பிடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், அடுத்த சுற்று பேச்சு எப்போது நடக்கும் என, தெரியவில்லை. ‘லடாக் எல்லையில், இப்போது பதற்றம் குறைந்திருந்தாலும், சீனாவின் பிடிவாதத்தால், நிலைமை எப்போது வேண்டுமானாலும் மாறலாம்’ என, இந்திய ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.