பட்டதாரிகள் அதிருப்தி

சென்னை: ஜனவரி . 1 – ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2024-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும் என பட்டதாரிகள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். மேலும், கடந்தாண்டு வெளியிடப்பட்ட தேர்வு அட்டவணையில் இடம்பெற்ற 9 அறிவிப்புகளில் ஒன்றுக்கு மட்டுமே டிஆர்பி தேர்வு நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள், அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள், வட்டார கல்வி அதிகாரிகள் (பிஇஓ), மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். அதுமட்டுமின்றி ஆசிரியர் தகுதித்தேர்வும் (டெட்) டிஆர்பி-யால் நடத்தப்படுகிறது.
ஓராண்டில் என்னென்ன போட்டித்தேர்வுகள் நடத்தப்படும், அவற்றுக்கான அறிவிப்புகள் எப்போது வெளியிடப்படும், தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி-யைப் போல் டிஆர்பி-யும் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையில் டிசம்பர் மாதத்திலேயே வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், டிசம்பர் முடிந்து 2024-ம் ஆண்டு பிறந்தும் இன்னும் டிஆர்பி வருடாந்திர தேர்வு அட்டவணை வெளியிடப்படவில்லை. இதனால், அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கு தயாராகி வருவோரும், டெட் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருப்போரும் மிகுந்த ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட டிஆர்பி தேர்வு அட்டவணையில் மொத்தம் 9 அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. அவற்றில் வெறும் 2 அறிவிப்புகள் (பிஇஓ தேர்வு, பட்டதாரி ஆசிரியர் தேர்வு) மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. அதிலும் பிஇஓ தேர்வு மட்டுமே நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர் தேர்வு பிப்ரவரி 4-ம் தேதி நடைபெற உள்ளது.