பட்டியல் சமூகமும் தேர்தல் அறிக்கைகளும்

சென்னை: ஏப்ரல். 11 – உலகின் பல நாடுகளில் வாக்குறுதிகளை அளித்து தேர்தலை எதிர்கொள்வது அரசியல் கட்சிகளின் வழக்கமான நடைமுறை. சில நாடுகளில் தேர்தல் அறிக்கைகளை முன்கூட்டியே தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஆணையம் அதை ஆய்வுக்கு உள்படுத்தி பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கிய பிறகே, தமது வாக்குறுதிகளைச் சொல்லி வாக்குச் சேகரிப்பில் கட்சிகள் ஈடுபட முடியும். அத்தகைய நடைமுறை இந்தியாவில் இல்லை.
தேசியக் கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் தாமே அறிக்கைகளைத் தயாரித்து வெளியிடுகின்றன. ஆனால், தேர்தலுக்கு முன்போ பின்போ அனைத்துக் கட்சிகளின் வாக்குறுதிகளுக்கும் சமூகத்தின் மேம்பாட்டுக்குமான தொடர்புகள் குறித்துப் போதுமான உரையாடல் நிகழ்வதில்லை.
வருங்காலத்தில் அது நிகழுமானால், கட்சிகளுக்கும் சமூகத்துக்குமான வரையறுக்கப்பட்ட மேம்பாட்டு நகர்வுக்கான பாதைகளைக் கண்டடைய முடியும். உதாரணமாக, 2014, 2019 நாடாளுமன்றத் தேர்தல்களையொட்டி வெளியான அறிக்கைகளில் இடம்பெற்ற பட்டியல் சாதியினருக்கான வாக்குறுதிகளை மையப்படுத்தி யோசிக்கலாம்.
கடந்த காலத் தேர்தல் அறிக்கைகள்: கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களையொட்டி வெளியான அனைத்துக் கட்சிகளின் வாக்குறுதிகள் தேசிய அளவிலான கல்வி, போக்குவரத்து, வணிகம், தொழில்நுட்பம், பெண்கள், சிறுவர்கள், மருத்துவம், விவசாயம், உள்கட்டமைப்பு, பாதுகாப்பு என்கிற பொது விஷயங்களில் கவனம் செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
இவை அனைத்திலும் கவனம்செலுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேவேளை, வெளிப்பார்வைக்குப் ‘பொது’ என்பதாகத் தோற்றமளிப்பவை, பல நேரம் பட்டியல் சாதியினரின் மேம்பாட்டுக்குப் போதுமான நியாயம் சேர்க்க இயலாதவையாக இருக்கின்றன. உதாரணமாக, ‘சர்வதேசத் தொழில் வளர்ச்சியில் கவனம் குவித்து, அதற்கேற்ப உள்நாட்டுத் தொழில் வளத்தை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்னும் வாக்குறுதியை எடுத்துக்கொள்வோம்.
இது அனைவரையும் கவனத்தில் கொண்ட ‘பொது’ வாக்குறுதிபோலத் தெரியும். அந்த வாக்குறுதியை அளித்து ஆட்சிக்கு வந்தவர்கள் அதை நிறைவேற்றி தொழில் வளத்தை உண்மையிலேயே அதிகரித்திருக்கலாம். ஆனால், சாதியின் பெயரால் சிறுதொழில் செய்வதற்குக்கூட வாய்ப்புகளும் வசதிகளும் மறுக்கப்பட்டவர்களுக்கு அந்தப் ‘பொது’ வாக்குறுதிகள் நன்மை பயத்திருக்கின்றனவா என்றும் பார்க்க வேண்டும்.