பணமதிப்பிழப்பு: மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ்

டெல்லி: நவ. 8 – பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 6 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அதன் தோல்வியை பிரதமர் மோடி ஒப்புக்கொள்ள மறுப்பதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. 2016ம் ஆண்டு நவ.8ம் தேதி இரவு 8 மணிக்கு தொலைக்காட்சிகளில் தோன்றிய பிரதமர் மோடி புழக்கத்தில் உள்ள 500,1000, ரூபாய்கள் நோட்டுகள் தடை செய்யப்படுவதாக அறிவித்தார். தடை செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை வங்கிகள் கொடுத்து புதிய ஆயிரம் மற்றும் 2,000 ரூபாய் தாள்களை பெறுவதற்காக மக்கள் மாதக்கணக்கில் வங்கிகளில் வரிசையில் காத்திருந்தனர்.
ஏழை எளிய நடுத்தர மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளானதுடன் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பல காணாமல் போகின. கருப்பு பணம் ஒழிப்பு, கள்ள ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு, தீவிரவாதத்துக்கு செல்லும் நிதியை தடுத்தல், பணப்புழக்கத்தை குறைப்பது என பண மதிப்பு நீக்கத்திற்கு ஒன்றிய அரசு கூறிய காரணங்கள் ஒன்றுகூட நிறைவேறவில்லை என்பது 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதும் உறுதியாகி இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. பணமதிப்பு நீக்க நடவடிக்கை கருப்பு பணத்தை ஒலித்ததோ இல்லையோ தொழிலாளிகளையும், வேலைவாய்ப்புகளையும் அழித்துவிட்டது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.பணமதிப்பிழப்பு நீக்க நடவடிக்கை அரைவேக்காட்டுத்தனமானது என விமர்சித்துள்ள தெலுங்கானா தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கே.டி.ராமராவ், மாபெரும் தோல்வியை ஒப்புக்கொண்டு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.