பணம் இல்லாத வீட்டுக்கு பூட்டு எதுக்கு கலெக்டரே? துணை ஆட்சியருக்கு திருடன் கடிதம்

போபால், அக். 12- மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் மாவட்டத்தின் காடேகான் நகரில் துணை கலெக்டரின் வீடு உள்ளது. குடும்பத்துடன் வெளியூர் சென்றவர், இரு வாரங்களுக்கு பின், கடந்த 10ம் தேதி வீடு திரும்பினார். அப்போது, வீட்டில் உள்ள பொருட்கள் கலைந்து கிடந்தன. உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தார். போலீசாரின் சோதனையில் ஒரு கடிதம் சிக்கியது. அதில், ‘பணம் இல்லாத வீட்டுக்கு பூட்டு எதற்கு கலெக்டரே? என, எழுதப்பட்டு இருந்தது. திருட சென்ற வீட்டில் எதுவும் கிடைக்காத விரக்தியில் கடிதம் எழுதிய திருடனின் செயல் அனைவரையும் பெரும் சுவாரசியத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த கடிதத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.