
பெங்களூர் : ஆகஸ்ட். 21 – தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணம் வசூலிப்பவராக பணியாற்றி வந்த இளைஞனை கடத்தி சென்று பணத்தை வழிப்பறி செய்த பிரபல ரௌடி கெஞ்சா என்பவனை வட கிழக்கு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர் . கொடிகேஹள்ளி போலீஸ் நிலையத்தில் ரௌடி பட்டியலில் உள்ள மனோஜ் என்ற கெஞ்சா (25) கைது செய்யப்பட்ட குற்றவாளியாவான். தனியார் நிதி நிறுவனத்தில் கடைகளில் பணத்தை வசூலிக்கும் பணியாற்றிவந்த கனகநகரை சேர்ந்த ஹரிப்ரசாத் என்பவர் கடந்த ஜூலை 16 அன்று பணங்களை வசூலித்துக்கொண்டு இரவு 10.30 மணியளவில் எலஹங்கா புதிய நகரில் உள்ள ஷராவதி சாலையில் உள்ள கெனரா வங்கி அருகில் நின்று கொண்டிருந்தபோது காரில் வந்த குற்றவாளி மனோஜ் மற்றும் அவனுடைய இரண்டு கூட்டாளிகள் திடீரென ஹரிபிரசாதை இழுத்து தங்கள் காருக்குள் ஏற்றிக்கொண்டனர். பின்னர் அவனை மிரட்டி பணத்தை அபகரித்து கொண்டு அவனை வெளியே தள்ளிவிட்டனர். இது குறித்து எலஹங்கா நியூ டவுன் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவானது. இந்த நிலையில் குற்றவாளியை கைது செய்ய எலஹங்கா ஏ சி பி மஞ்சுநாத் தலைமையில் அமைக்கப்பட்ட தனி குழுவினர் நடவடிக்கையில் இறங்கி குற்றவாளியை கைது செய்துள்ளனர். கெஞ்சாவுக்கு எதிராக கொடிகேஹள்ளி , எலஹங்கா , சம்பிகேஹள்ளி , சிக்கஜாலா , ராஜன்குண்டே , பாக்லகுண்டே , கண்கம்மனகுடி , பைட்டராயணபுரா , ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை , கொலை முயற்சி , வழிப்பறி மற்றும் கடத்தல் உட்பட 12க்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ளன. சில புகார்களில் சிறைக்கு சென்றிருந்த குற்றவாளி கெஞ்சா பின்னர் ஜாமீனில் வெளியே வந்திருந்துள்ளான். பின்னர் நீதிமன்றத்திற்கு ஆஜராகாமல் தலைமறைவாயிருந்துள்ளான். இவனை கைது செய்ய நீதிமன்றங்களில் ஆறேழு வாரென்ட்டுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. இதனால் போலீசார் இவனை தீவிரமாக தேடி வந்தனர். சுமார் இரண்டு வருடங்களுக்கு பின்னர் இவனை கைது செய்வதில் போலீசார் வெற்றியடைந்துள்ளனர். குற்றவாளி கெஞ்ச போலிஸாரின் கைதுக்கு பயந்து வீட்டுக்கு சென்றுகொண்டிருக்கவில்லை .பொது குளியலறைகளில் குளித்து இரவு நேரங்களில் வாகன நிறுத்துமிடங்களில் காரை நிறுத்தி உறங்கிவந்துள்ளான். நகரில் நடக்கும் குற்றங்களை செய்ய தனக்கே ஒரு கும்பலை தயார் செய்திருந்தான். இந்த கும்பலை பின்பற்றியே போலீசார் தற்போது குற்றவாளியை கைது செய்துள்ளனர். பணம் வசூலிப்பவரை கடத்தி பணம் அபகரித்து தொடர்பாக குற்றவாளியை கைது செய்துள்ள எலஹங்கா நியூ டவுன் போலீசார் இவனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஐந்து நாட்கள் விசாரணைக்கு எடுத்துள்ளனர்