பண மதிப்பிழப்பு செல்லும்

டெல்லி:ஜன.2-
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு திடீரென ரூ.500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டார்.
இதனால் நாட்டு மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்தனர். இந்த நிலையில் பண மதிப்பிழப்புக்கு எதிராக 57 ரிட் மனுக்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, ‘‘பணமதிப்பிழப்பு விவகாரத்தில் ஒன்றிய அரசு அறிவித்தது தவறான முடிவு.
இத்தகைய முடிவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தாக வேண்டும். இந்த உத்தரவால் நாட்டின் அனைத்து குடிமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்’’ என மனுதாரர்கள் தரப்பிலும், ‘‘பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மறு பரிசீலனை செய்யக் கூடாது. இந்த விவகாரத்தில் அனைத்தையும் ஆய்வு செய்த பின்னர் தான் முடிவெடுக்கப்பட்டது.
இதில் தடை விதிக்கப்பட்டால் முந்தைய காலத்திற்கு செல்லும் சூழல் ஏற்படும். அதனால் நீதிமன்றம் இதில் தலையிட வேண்டாம்’’ என ஒன்றிய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் டிசம்பர் 7ம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கில் நீதிபதிகள் அப்துல்நசீர், பி.ஆர்.கவாய், போபண்ணா, ராமசுப்ரமணியம், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ரிசர்வ் வங்கியை கலந்து ஆலோசித்த பிறகே ஒன்றிய அரசு பணமதிப்பிழப்பு முடிவை எடுத்துள்ளது.
ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ள பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் தவறு எதுவும் இல்லை. செல்லாது என அறிவிக்கப்பட்ட நோட்டுகளை மாற்றிக்கொள்ள 52 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது போதாது என கூற முடியாது.
பணமதிப்பிழப்பு மேற்கொள்ளப்பட்ட நடைமுறையில் உள்ள குளறுபடிகளை சுட்டிக்காட்டி ரத்து செய்ய முடியாது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஒன்றிய அரசு மேற்கொள்ள அதிகாரம் உள்ளது என்ற கவாய் தீர்ப்பிலிருந்து மாறுபடுவதாக நீதிபதி நாகரத்னா அறிவித்துள்ளார்.