பதற வைக்கும் பாகிஸ்தான் பொருளாதாரம்

இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் இப்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அண்டை நாடுகள் வலுவிழந்து போவது நமக்கு நல்லதல்ல. அந்த நாட்டுடன் ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகத்தில் ஏற்படும் சரிவு தொடங்கி, அகதிகள் ஊடுருவல், அதனால் நிகழக்கூடிய சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரை பல சவால்களை நாம் சந்திக்க வேண்டி வரும். இதன் தொடர் விளைவாக எழும் அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தம் தவிர்க்க இயலாதது. இது நமது வளர்ச்சிக்குக் குந்தகம் ஏற்படுத்தவே செய்யும். எனவே, பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார பதற்றம் விரைவில் தணிந்து இயல்பு நிலை திரும்பினால் நல்லது.
பொருளாதாரத்தில், தெற்காசியாவின் வலுவற்ற நாடாகப் பாகிஸ்தான் உள்ளதாக உலக வங்கி கூறுகிறது. இந்த இக்கட்டில் இருந்து நாட்டை மீட்க அறிவார்ந்த யுக்தி, கடுமையான முடிவுகளை எடுப்பதற்கான அரசியல் துணிவு, மக்களை ஊக்கப்படுத்தி நாட்டின் மறுகட்டமைப்புக்கு வழி நடத்திச் செல்லும் பொறுப்பு வாய்ந்த தலைமை கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காணக் கிடைக்கவில்லை. எனவே இப்போதைக்கு, ‘வெளி ஆதரவு’ மட்டுமே பாகிஸ்தான் நாட்டை மோசமான விளைவுகளில் இருந்து காக்க முடியும். இலங்கை மற்றும் பாகிஸ்தானின் பொருளாதார வீழ்ச்சி உலக நாடுகளுக்குச் சொல்லும். அரசின் பொருளாதார மேலாண்மை அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை வரை நீள்கிறது.

எனவே, ஒருபோதும் பொருளாதாரக் கொள்கையில் அலட்சியமாக இருக்கக் கூடாது. இரண்டாவது, அந்நிய உதவி புதை மணல் போன்றது. அளவு கடந்தால், மீள்வது எளிதல்ல. எனவே, அந்நிய கடன் பெறுவதில் கூடுதல் கவனம் தேவை. உலகம் உணருமா..?