பதவியேற்ற 12 மணி நேரத்துக்குள் ராஜினாமா செய்த சுவீடன் நாட்டின் முதல் பெண் பிரதமர்

ஸ்டாக்ஹோம், நவ. 25- சுவீடன் நாட்டின் பிரதமராக இருந்த ஸ்டீபன் லோபென் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பதவி விலகினார். இதனை தொடர்ந்து,சுவீடன் நாட்டின் நிதி அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த மேக்டலெணா ஆண்டர்சன் அந்நாட்டின் முதல் பெண் பிரதமரக நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், பதவியேற்ற 12 மணி நேரத்துக்குள் சுவீடன் நாட்டின் முதல் பெண் பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சுவீடனை பொறுத்தவரையில் பிரதமராக பதவி வகிக்கும் நபர், நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராக வாக்குகள் திரும்பாதவரை பிரதமராகவே தனது பொறுப்பை தொடரலாம், கால வரையறை என்பது கிடையாது.
சுவீடன் நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சராக பொறுப்பு வகித்து வரும் ஆண்டர்சன் மற்றும் எதிர்க்கட்சி சார்பிலும் இரண்டு பட்ஜெட்டுகள் தாக்கல் செய்யப்பட்டன. அவர் பிரதமராக பொறுப்பேற்ற சில மணி நேரத்திலேயே ஆளும் கட்சி தாக்கல் செய்த புதிய பட்ஜெட் நாடாளுமன்றத்தின் பெரும்பாலான உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்டது.ஆனால், எதிர்க்கட்சிகளின் பட்ஜெட்டுக்கு அமோக ஆதரவு கிடைத்தது.
எதிர்க்கட்சியின் பட்ஜெட்டுக்கு ஆதரவாக, ஆளும்கட்சிக்கு ஆதரவு அளித்து வந்த பசுமைக் கட்சி வாக்களித்தது. மேலும், பசுமைக் கட்சி தற்போது ஆளுங்கட்சியான சமூக ஜனநாயக கட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டது. இதன் காரணமாக அவர் பெரும்பான்மையை நிரூபிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டார்.
இதனையடுத்து, பிரதமருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.மொத்தம் 349 உறுப்பினர்களை கொண்ட சுவீடன் நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் ஆண்டர்சனுக்கு ஆதரவாக 117 உறுப்பினர்களும், எதிராக 174 உறுப்பினர்களும் வாக்களித்தனர், 57 பேர் வாக்களிக்கவில்லை.
இதனால் சுவீடனின் முதல் பெண் பிரதமர் மேக்டலெணா ஆண்டர்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
உலகளாவிய சம வாக்குரிமை முடிவை அறிவித்ததன் 100வது ஆண்டு விழாவை சுவீடன் கொண்டாடி வரும் வேளையில், இச்சம்பவம் அரங்கேறி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சுவீடனில் அடுத்த பொதுத் தேர்தல் செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெற உள்ளது.