பதிவெண் இல்லா காரில் பயணம் செய்த ஓவைசி – டிரைவருக்கு அபராதம்

மும்பை, நவ. 24- அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் (எஐஎம்ஐஎம்) கட்சி தலைவராக செயலப்ட்டு வருபவர் அசாதுதீன் ஓவைசி. ஐதராபாத் தொகுதி எம்.பி.யுமான ஓவைசி நேற்று மராட்டிய மாநிலம் சோலாப்பூரில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் அரசு விருந்தினர் மாளிகையில் தங்குவதற்காக ஓவைசி ஒரு காரில் புறப்பட்டு சென்றார். சோலாப்பூர் சர்தார் பஜாரில் உள்ள விருந்தினர் மாளிக்கைக்குள் கார் வந்தபோது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் அதிகாரி ரமேஷ் சித்தன்கிடி அந்த காரில் பதிவெண் இல்லாததை கண்டார்.
உடனடியாக பதிவெண் இல்லாமல் காரை ஓட்டியதற்காக அபராதம் செலுத்தும்படி ஓவைசி பயணித்த காரின் டிரைவரிடம் போலீஸ் அதிகாரி கேட்டுள்ளார். அப்போது அங்கு கூடியிருந்த எஐஎம்ஐஎம் கட்சித்தொண்டர்கள் போலீஸ் அதிகாரி ரமேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து அங்கு போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்து சென்றனர். மேலும், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகாந்த் அங்கு சென்று பதிவெண் இல்லாமல் காரை ஓட்டியதற்காக ஓவைசியின் டிரைவரிடம் 200 ரூபாய் அபராதம் வசூல் செய்தார்.
பதிவெண் இல்லாத காரில் ஐதராபாத் எம்.பி. அசாதுதீன் ஓவைசி பயணம் செய்த நிலையில் கார் டிரைவருக்கு அபராதம் விதித்த போலீஸ் அதிகாரி ரமேஷ் சித்தன்கிடிக்கு உள்ளூர் போலீஸ் தரப்பில் ரூ. 5 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.