
ஈரோடு மார்ச் 6-
கள்ளுக்கடைமேடு கொண்டத்து பத்ரகாளி அம்மன்கோவில் குண்டம் விழாவையொட்டி பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். தீர்த்தக்குட ஊர்வலம் ஈரோடு கள்ளுக்கடைமேடு பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கொண்டத்து பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் விழா கடந்த மாதம் 21-ந்தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. கடந்த 27-ந்தேதி இரவு 7 மணிக்கு கோவிலில் கொடி ஏற்றப்பட்டது. நேற்று காலை பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் மற்றும் பால்குடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதையொட்டி கள்ளுக்கடைமேடு நண்பர்கள் அன்னதானக்குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தீ மிதித்து நேர்த்திக்கடன் இன்று (திங்கட்கிழமை) இரவு 8 மணிக்கு அக்னி கபாலம் நிகழ்ச்சியும், நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு குண்டம் பற்றவைத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை மறுநாள் (புதன்கிழமை) குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி அன்று அதிகாலை 5 மணிக்கு குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அதைத்தொடர்ந்து கோவில் பூசாரி மற்றும் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். இதையொட்டி பத்ரகாளி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பத்ரகாளி அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் ஊர்வலம் நடைபெறுகிறது. 9-ந்தேதி மாலை 5 மணிக்கு மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.