பனிப்பொழிவால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புதுடெல்லி, ஜன. 21-
காஷ்மீர், உத்தரகாண்ட் போன்ற மலைப்பிராந்திய மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.இந்தியாவின் வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கடுமையான குளிர் வாட்டி வருகிறது. காலை நேரங்களில் கடுமையான பனிமூட்டமும் நிலவி வருவதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம், பஞ்சாப் போன்ற வட மாநிலங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை நாளுக்கு நாள் சரிந்து கொண்டே போனதால் உயிரிழப்புகளும் அதிகரித்து வந்தன.இந்த நிலையில் இமயமலை பிராந்தியங்களில் அமைந்துள்ள உத்தரகாண்ட், காஷ்மீர் போன்ற மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு தொடங்கி இருக்கிறது.
இதனால் போக்குவரத்தும் முடங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது.
உத்தரகாண்டை பொறுத்தவரை, அங்கு புதைந்து வரும் ஜோஷிமத் நகரம், பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட மலைப்பிரதேசங்கள் அனைத்தும் பனிப்போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கின்றன.தலைநகர் டேராடூன், முசோரி சுற்றுலாத்தலம் போன்ற இடங்களிலும் பனிப்பொழிவு தொடங்கி இருக்கிறது.

அதேபோல சமவெளி பிரதேசமான ஹரித்வார், உத்தம் சிங் நகர் மாவட்டங்களும் பனிமூட்டத்தால் முடங்கி இருக்கின்றன. இந்த பனிப்பொழிவு மற்றும் கடும் குளிரால் மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது.

ஜோஷிமத் நகரில் சேதமடைந்த கட்டிடங்களை இடிக்கும் பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளன.