பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை; காஷ்மீரில் ஐந்து பேர் சுட்டுக் கொலை

ஜம்மு, அக். 13- ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டையில் ஐந்து பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு – காஷ்மீரில் கடந்த சில நாட்களாக அப்பாவி மக்களை குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த வாரத்தில் தெருவோர வியாபாரி உட்பட ஏழு பொது மக்கள் கொல்லப்பட்டனர். நேற்று முன்தினம் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் ஐந்து ராணுவ அதிகாரிகள் வீர மரணம் அடைந்தனர். இதையடுத்து பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டையில் பாதுகாப்புப் படைகள் இறங்கியுள்ளன.தெற்கு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புக்குள் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் நேற்று சுற்றி வளைக்கப்பட்டனர். அதில் எதிர்ப்புப் படை என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப் பட்டனர்.பயங்கரவாதிகளை வெளியே வரவழைக்க பாதுகாப்புப் படையினர் குண்டுகளை வீசியதில், இரண்டு வீடுகள் சேதம் அடைந்தன.இதற்கிடையே ஷோபியான் மாவட்டத்தில் நடந்த மற்றொரு தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.