பயணிகளுக்கு விமான நிலையம் அறிவுறுத்தல்

புதுடெல்லி, ஜன. 7- வடஇந்தியா முழுவதும் கடுமையான பனியால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். டெல்லியில் இந்த குளிர்கால பருவத்தில் அடர்பனி சூழல் ஏற்பட்டு, தெளிவற்ற வானிலை காணப்படுகிறது. டெல்லியில் கார், பைக் உள்ளிட்ட வாகன போக்குவரத்தும் பாதிப்படைந்து உள்ளது. அதிகளவில் பனி மற்றும் தெளிவாக பார்க்க முடியாத சூழல் ஆகியவற்றால் சாலைகளில் வாகனங்கள் காலையிலேயே முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்கின்றன. டெல்லியில், குளிர்கால அலை வீசி வருவதுடன் பல இடங்களில் வெப்பநிலை குறைந்து காணப்படுகிறது. இதனை முன்னிட்டு, விமான சேவையும் பாதிக்கப்பட்டு உள்ளது. நேற்று பல விமானங்கள் காலதாமதமுடன் இயக்கப்பட்டன. இதனை தொடர்ந்து, விமான பயணிகளுக்கு டெல்லி விமான நிலையம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. இதுபற்றி அதிகாரிகள் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், அனைத்து விமான இயக்கங்களும் தற்போது சீராக இயங்கி வருகின்றன. எனினும், விமானங்களின் சமீபத்திய தகவல் மற்றும் அடுத்த இயக்கம் உள்ளிட்ட விவரங்களை பயணிகள், விமான நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு அவற்றை பற்றி கேட்டு தெரிந்து கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகின்றனர் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.