பயிற்சி டாக்டர்கள் கொத்தடிமைகளா? உச்ச நீதிமன்றம் கேள்வி

டெல்லி அக்.17-எம்பிபிஎஸ் பயிற்சி மருத்துவர்களுக்கு கட்டாய உதவித் தொகையை மறுக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம், இது கொத்தடிமைத்தனம் போன்றது என விமர்சித்துள்ளது. டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவ அறிவியல் கல்லூரியில் எம்பிபிஎஸ் பயிற்சி மருத்துவர்களுக்கு கட்டாய உதவித் தொகை வழங்கப்படுவதில்லை என்று தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு விசாரித்து வருகிறது. நேற்றைய விசாரணையின் போது, வாதிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், நாட்டில் உள்ள 70% மருத்துவ கல்லூரிகள் எம்பிபிஎஸ் பயிற்சி மருத்துவர்களுக்கு கட்டாய உதவித்தொகையை வழங்குவதில்லை என்று சுட்டிக் காட்டினார்.
அப்போது பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், இது கொத்தடிமை முறைபோன்று இருப்பதாக குற்றம் சாட்டினார். அவர்கள் அனைவரும் 4 வருட மருத்துவக்கல்வியை முடித்தவர்கள் என்று தெரிவித்த சந்திரசூட் , தேசிய மருத்துவ ஆணையம் என்ன செய்து கொண்டு இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார். மருத்துவ கல்லூரி நிர்வாகங்களுக்கு கோடி கணக்கில் பணம் வசூலிக்க அனுமதி வழங்கும் அமைப்புகள் 20 மணி நேர கடுமையாக பணியற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு உதவித் தொகை வழங்க உத்தரவிட முடியாதா என்றும் தலைமை நீதிபதி வினவினார். மனுதாரரின் குற்றச்சாட்டிற்கு பதில் தர தேசிய மருத்துவ ஆணையம் சார்பில் அவகாசம் கோரப்பட்டது. இதனையடுத்து அவகாசம் வழங்கிய நீதிபதி, டெல்லி ராணுவ மருத்துவ அறிவியல் கல்லூரி நிர்வாகம் அக் 1ம் தேதி முதல் எம்பிபிஎஸ் பயிற்சி மருத்துவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.25,000 வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.