பரிசு மழையில் வாக்காளர்கள்

ஈரோடு: பிப்ரவரி . 22 -ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் பரிசு மழையில் நனைந்து வருகின்றனர். இலவச குக்கர் இலவச சேலை இலவச கொலுசு இலவச கோழிக்கறி இலவச ஜவுளிகள் என்று அரசியல் கட்சி வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு வாரி வழங்கி வருகின்றனர் மேலும் பண பட்டுவாடாவும் சுறுசுறுப்பாக நடந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுகள் விவகாரம் தொடர்பாக தேர்தல் கமிஷன் விசாரணை தொடங்கியுள்ளது
ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2 வாரமாக தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி., கே.எஸ்.அழகிரி, ப.சிதம்பரம், திருநாவுக்கரசு, ஜி.கே.வாசன், அண்ணாமலை, உள்ளிட்ட தலைவர்கள் பிரசாரம் செய்தனர். பிரேமலதா விஜயகாந்த், சீமான் உள்ளிட்டோர் தொகுதியில் முகாமிட்டு தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். இதே போல் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என ஏராளமான பேர் தீவிர பிரசாரம் செய்து ஓட்டு வேட்டையாடி வருகின்றனர். தேர்தல் பிரசாரம் வருகிற 25-ந்தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. எனவே தற்போது தொகுதியில் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது. ஒவ்வொரு நிர்வாகிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இறுதி கட்ட பிரசாரம் செய்து வருகிறார்கள். இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் தொகுதி முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் நிறைந்து காணப்படுகிறது. தொகுதி முழுவதும் மேளதாளம் முழங்க பிரசாரம் நடந்து வருகிறது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் பரவலாக வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையே, ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை வாக்குகள் இருக்கின்றன என்ற எண்ணிக்கை குறித்து, வீடுகளின் முகப்பு சுவரில், குறியீடு இடப்பட்டிருப்பது குறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஈரோடு கிழக்கில் வாக்காளர்களை கொட்டகையில் அடைத்து வைத்து பணம் விநியோகம் செய்வது, சுற்றுலா அழைத்துச் செல்வது, தலைவர்களின் பிரச்சாரத்தில் பங்கேற்கச் செய்து, அதற்கு பணம் வழங்குவது, அசைவ விருந்து வழங்குவது என பல முறைகேடுகள் நடப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், பரிசுப் பொருள், பணம்வழங்கும் நடவடிக்கையில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குக்கர் விநியோகம்: இதற்கிடையே, வெட்டுக்காட்டு வலசு பகுதியில், நேற்று முன்தினம் வீடு வீடாக குக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. குக்கர் பெற்றுக் கொண்ட பெண்களிடம், கை சின்னத்துக்கு வாக்களிக்ககோரும் துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில், எவர்சில்வர் குடங்கள், வேட்டி, சேலையும் வழங்கப்பட்டுள்ளன.
ஈரோடு சிந்தன் நகர் பகுதியில், அதிமுக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று, பெண்களுக்கு வெள்ளிக் கொலுசு, ஆண்களுக்கு தலா ரூ.500 வழங்கியுள்ளனர்.
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகள் சார்பிலும் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள் விநியோகம் செய்யும் வீடியோ பதிவுகளும் வைரலாகி வருகின்றன.
இரவில் மின்சாரம் துண்டிப்பு: இந்த நிலையில், தொகுதியில் பல்வேறு பகுதிகளிலும், ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை வாக்குகள் இருக்கின்றன என்ற எண்ணிக்கை குறித்து, வீடுகளின் முகப்பு சுவரில், குறியீடு இடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், இரவு நேரங்களில் மின் இணைப்பை துண்டித்துவிட்டு, ஒரு வாக்குக்கு இவ்வளவு என கணக்கிட்டு, பணம் வழங்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் புகார் கொடுத்த அதிமுக சட்டப் பிரிவுநிர்வாகி இன்பதுரை கூறியபோது, ‘‘வாக்காளர்களை சுதந்திரமாக இருக்க விடாமல், அவர்களது வறுமையை பயன்படுத்தி, விலை பேசுவதும், அடைத்து வைப்பதுமாக திமுகவினர்அராஜகம் செய்கின்றனர். வெட்டுக்காட்டு வலசு,சக்தி குடோன் உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ்வேட்பாளருக்கு வாக்களிக்க கோரி பரிசுப்பொருளாக வீடுதோறும் குக்கர் வழங்கியுள்ளனர். இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்துள்ளோம். பறக்கும் படையும் இதை கண்காணிப்பது இல்லை. தேர்தல் பார்வையாளர்களும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்’’ என்றார்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்தும், வீடுகளில்எத்தனை வாக்கு இருக்கிறது என சுவரில் குறியிடப்பட்டிருப்பது குறித்தும் தேர்தல் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தேர்தல் நடத்தும் அலுவலர் க.சிவகுமார் கூறியபோது, ‘‘வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் விநியோகம் தொடர்பான புகாரைஅடுத்து, 4 பறக்கும் படைகள் சம்பவ இடத்துக்குசென்று விசாரணை நடத்தின. வாக்காளர்களுக்கு பரிசுப் பொருள் விநியோகம் தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக புகார் கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.