
ஹாங்சோ, அக். 4-19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிருக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் பருல் சவுத்ரி பந்தய தூரத்தை 15:14.75 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். பந்தயத்தின் கடைசி சில மீட்டர் தூரத்தில் ஜப்பானின் ரிகிகா ஹிரோனகாவை முந்தி அசத்தினார் பருல் சவுத்ரி. மகளிருக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் அன்னு ராணி 62.92 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். ஆசிய விளையாட்டு வரலாற்றில் மகளிர் ஈட்டி எறிதலில் இந்தியா தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதன்முறையாகும். 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் வித்யா ராம்ராஜ் பந்தய தூரத்தை 55.68 விநாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார். இவர், தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார். ஆடவருக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் மொகமது அஃப்சல் 1:48.43 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான டிரிப்பிள் ஜம்ப்பில் இந்தியாவின் பிரவீன் சித்ரவேல் 16.68 மீட்டர் நீளம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார். பிரவீன் சித்ரவேல் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார். ஆடவருக்கான டெகத்லானில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் 7,666 புள்ளிகள் குவித்து தேசிய சாதனையுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆசிய விளையாட்டு போட்டி டெகத்லானில் கடைசியாக 1974-ம் ஆண்டு விஜய் சிங் சவுகான் பதக்கம் வென்றிருந்தார். அதன் பின்னர் தற்போது தேஜஸ்வின் சங்கர் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மகளிருக்கான குத்துச்சண்டை 75 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் லோவ்லினா போர்கோஹைன் 5-0 என்ற கணக்கில் தாய்லாந்தின் பைசன் மனிகோனை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். 54 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் பிரீத்தி பவார் அரை இறுதியில் 0-5 என்ற கணக்கில் சீனாவின் சாங் யுவானிடம் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.