பர்கூர் அருகேகல்குவாரி தண்ணீரில் மூழ்கி ஐ.டி.ஐ. மாணவர் பலி


பர்கூர், ஏப்.17-
பர்கூர் அருகே கல்குவாரி தண்ணீரில் மூழ்கி ஐ.டி.ஐ. மாணவர் பலியானார். அவரது உடலை மீட்க கால தாமதமானதால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த பெரியசெட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ராமசாமி. இவரது மகன் பலராமன் (வயது 18). இவர் ஐ.டி.ஐ.யில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் விடுமுறை என்பதால், தனது நண்பர்கள் 10 பேருடன் செந்தாரப்பள்ளி அருகில் பழைய அரசு கல்குவாரியில் தேங்கியுள்ள குட்டையில் குளிக்க சென்றார். 150 அடி ஆழமுள்ள இந்த கல்குவாரி குட்டையில் தற்போது 100 அடி தண்ணீர் தேங்கி உள்ளது. இதில் பலராமன் மட்டும் தண்ணீரில் இறங்கி குளித்து கொண்டிருந்தார். முழுமையாக நீச்சல் கற்றுக்கொள்ளாத பலராமன் ஆழமான பகுதிக்கு சென்ற போது அவரால் நீந்த முடியாமல் தண்ணீரில் மூழ்கி பலியானார்.
இந்த நிலையில் அங்கிருந்த இளைஞர்கள் கிராமத்திற்கு சென்று தகவல் தெரிவித்தனர். அவர்கள் பர்கூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் நேற்று முன்தினம் மதியம் 2.30 மணிக்கு பர்கூர் தீயணைப்பு நிலைய அலுவலர் செங்கோட்டுவேலு தலைமையில், முன்னணி தீயணைப்பு அலுவலர் பழனி உள்பட 8 பேர் கொண்ட குழுவினர் குட்டைக்கு சென்றனர். அங்கு படகில் சென்று கொக்கியை தண்ணீரில் விட்டு தேடினர். இரவு 7 மணி வரை தேடியும் பலராமனின் உடல் கிடைக்கவில்லை.
பின்னர் நேற்று காலை 6 மணி முதல், பர்கூர் தீயணைப்பு வீரர்கள், போச்சம்பள்ளி தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து மீண்டும் தேடுதலில் ஈடுபட்டனர். இந்த நிலையில், முறையாக தேடுதலை நடத்தவில்லை எனக்கூறி பலராமனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று காலை திருவண்ணாமலை – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் செந்தாரப்பள்ளி கூட்டு ரோடு அருகே சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் அவர்களை சமாதானப்படுத்தியதால், மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். கல்குவாரி அருகே 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்ததால், பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேலு தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று மாலை 5.15 மணியளவில் பலராமன் உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
முன்னதாக மாணவரின் உடலை மீட்க தாமதமானதை கண்டித்து நேற்று மாலை ஒரப்பம் அருகே சென்னை-பெங்்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சுமார் அரைமணி நேரம் சாலைமறியல் செய்தனர்.
உடல் மீட்கப்பட்ட தகவல் அறிந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.