பற்றி எரிந்த பஸ் 13 பேர் உயிரோடு தகனம்

போபால்: டிசம்பர் . 28 – மத்தியப் பிரதேசத்தில் சாலை விபத்தில் சிக்கிய தனியார் பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்ததில் 13 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் குணா-ஆரோன் நெடுஞ்சாலையில் நேற்றிரவு தனியார் பேருந்து ஒன்று டேங்கர் லாரி மீது மோதி கவிழ்ந்திருக்கிறது. இதனால் பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்திருக்கிறது. விஷயமறிந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு செல்வதற்கு முன்னர் உடல் கருகி 13 பேர் பலியாகியுள்ளனர். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பயணிகளை மீட்ட தீயணைப்பு துறையினர் அவர்களை மருத்தவமனையில் அனுமதித்துள்ளனர். தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு வருவதாக தகவல். இந்த விபத்து குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது 17 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றிய போலீசார், அவர்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் எனவும் அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. பேருந்து விபத்தில் 13 பேர் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.