பலி 65 ஆக உயர்வு

மாஸ்கோ:ஜன.25- உக்ரைன் போர்க் கைதிகள் 65 பேரை ஏற்றிச் சென்ற ரஷ்ய ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததில் அதில்இருந்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.
உக்ரைன் போரில் சிறைபிடிக்கபட்ட 65 கைதிகளை ஏற்றிச் சென்ற ரஷ்ய ராணுவத்துக்கு சொந்தமான விமானம் மேற்கு பெல்கோரோட் பிராந்தியத்தில் (உக்ரைன் எல்லைப் பகுதி) திடீரென விழுந்து நொறுங்கியது. இதில்,
அந்த விமானம் தீப்பற்றி எரிந்ததில் 65 உக்ரைன் கைதிகள், ஆறு விமான பணியாளர்கள், மூன்று பாதுகாப்பு படை வீரர்கள்உட்பட அனைவரும் உயிரிழந்துவிட்டதாக பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள்காட்டி பிராந்தியஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று முற்பகல் உள்ளூர் நேரப்படி 11 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக கண்டறியப்படவில்லை. விபத்து நடந்த பகுதியை முற்றுகையிட்டு காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, ரஷ்ய நாடாளுமன்ற கீழவையின் சபாநாயகர் வியாஸ்செஸ்லாவ் வேலோடின் கூறுகையில், “ரஷ்ய ராணுவ விமானத்தை உக்ரைன் சுட்டுவீழ்த்தியுள்ளது. தங்களது சொந்த வீரர்களையே உக்ரைன் ராணுவம் கொன்றுள்ளது. இந்த சம்பவத்தில், மனிதாபிமான பணியை மேற்கொண்ட ரஷ்ய விமானிகளும் தங்களது இன்னுயிரை இழந்துள்ள னர்’’ என்றார்.