பல்கலைக்கழக வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம்

திருமலை:nஆக.16- திருப்பதி மலைப்பாதையில் பெற்றோருடன் சென்ற 6 வயது சிறுமியை சிறுத்தை கொன்றது. இதையடுத்து ஒரு சிறுத்தை கூண்டில் சிக்கியது. ஆனால் சில மணி நேரத்தில் மீண்டும் வேறு ஒரு சிறுத்தை அதே இடத்திற்கு வந்தது. இந்நிலையில் திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியியல் துறை கட்டிடம் எதிரே வனப்பகுதியில் இருந்து திடீரென ஒரு சிறுத்தை வந்தது. இதனை கண்டு அங்கிருந்த மாணவ, மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
அப்போது மாணவர்கள் சிலர் சிறுத்தையை மறைந்திருந்து புகைப்படமும் எடுத்துள்ளனர். மேலும் போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார், வனத்துறையினர் விரைந்து வந்து பட்டாசு வெடித்து சிறுத்தையை விரட்டியடித்தனர். தொடர்ந்து சிறுத்தை வராமல் இருக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பதி மலைப்பாதையில் கடந்த 3 நாட்களாக சுற்றிவந்த சிறுத்தை, தற்போது கீழே இறங்கி மலையடிவாரத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகத்திற்குள் வந்ததால் பொதுமக்கள், பக்தர்கள் பீதியில் உள்ளனர். இதையடுத்து, பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவ, மாணவிகள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இரவு 7 மணிக்கு பிறகு யாரும் வெளியே வரவேண்டாம் தனியாக யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.