பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை: நவ.23- கனமழை காரணமாக இன்று தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு-மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.மேலும் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வரும் 26-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வரும் 27-ம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் நிலவக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நள்ளிரவு முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், 8 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (நவ.23) விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, புதுக்கோட்டை, நீலகிரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், தேனி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.