பள்ளிகள் மீண்டும் திறப்பு

சென்னை: ஜனவரி . 2 – அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு, அரையாண்டு தேர்வு கடந்த டிசம்பர் மாதம் 13-ந்தேதி தொடங்கப்பட்டது. முதலில் 7-ந்தேதி முதல் தொடங்கி நடைபெறுவதாக இருந்த நிலையில், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பெய்த கனமழையால் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு பின்னர் நடத்தி முடிக்கப்பட்டன. இதையடுத்து கடந்த 18-ந்தேதி தென்மாவட்டங்களில் பெய்த மழை வெள்ளத்தால், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு மட்டும் சில பாடங்களுக்கு தேர்வுகள் நடத்த முடியாமல் போனது.
இதற்கிடையில், அரையாண்டு விடுமுறையும் நெருங்கியதால், தமிழகம் முழுவதும் உள்ள மாணவ, மாணவிகளுக்கு டிசம்பர் 23-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. தனியார் பள்ளி மாணவர்களுக்கும் ஜனவரி 1-ந்தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில், அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.