பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம்

பழனி முருகன் கோவிலில் வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது. இந்நிலையில் கும்பாபிஷேகத்துக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். வருவாய் அலுவலர் லதா, போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கோவில் இணை ஆணையர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வருவாய், போலீஸ், சுகாதாரம், போக்குவரத்து என அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், கும்பாபிஷேகத்தின்போது பக்தர்களுக்கான அனுமதி, முன்னேற்பாடு வசதிகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர், கும்பாபிஷேகத்தில் 6 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவது எனவும், இதில் கோவில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் பக்தர்களில் 3 ஆயிரம் பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பங்கேற்க உள்ளனர் என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போதிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது, அடிவார பகுதியில் உள்ள தங்கும்விடுதிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க குழு அமைத்து சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டது.