
பெங்களூர் : மே. 26 – தற்போது பஸ்களில் பெண்கள் இலவச பயணத்திற்கு வற்புறுத்துவதுடன் போக்குவரத்து மேற்பார்வையாளர்களும் தங்களிடம் வீண் வாக்கு வாதங்களில் ஈடு படுவதாலும் இனியும் தாமதிக்காமல் உடனே பெண்களுக்கான இலவச பஸ் பயண சேவையை துவங்குமாறு கே எஸ் ஆர் டி சி ஊழியர் சங்கம் முதல்வர் சித்தராமையாவை வற்புறுத்தியுள்ளது. இது குறித்து கே எஸ் ஆர் டி சி ஊழியர் சங்க தலைவர் விஜயகுமார் கூறுகையில் பெண் பயனியரிடம் டிக்கெட் வசூலிக்காத போது போக்குவரத்து சோதனை அதிகாரிகள் நடத்துனர்களிடம் வாக்கு வாதங்களில் ஈடுபடுகின்றனர். இதே வேளையில் அரசு எங்களுக்கு இலவச பஸ் பயணத்தை அறிவித்திருந்தாலும் நடத்துனர்கள் எங்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பெண் பயணிகள் நடத்துனர்களிடம் தகராறில் ஈடுபடுகின்றனர்.இது போன்ற பிரச்சனைகளால் நடத்துனர்கள் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் மிகவும் சங்கடத்திற்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து கடந்த மே 24 அன்று அரசுக்கு நாங்கள் அளித்த கடிதத்திற்கு முதல்வர் அலுவலகத்திலிருந்து இன்னும் எவ்வித பதிலும் வரவில்லை. எந்த அரசும் தான் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் உடனுக்குடன் நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை என்றாலும் ஒரு சில வாக்குறுதிகளை எவ்வித தாமதம் மற்றும் சிரமம் இன்றி உடனுக்குடன் நடைமுறை படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என ஊழியர் சங்கம் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது மாநிலம் முழுக்கவே பஸ் நடத்துனர்களுக்கும் பெண் பயணியருக்கும் இடையே இந்த இலவச பயணம் குறித்து வாக்குவாதங்கள் நடந்தபடி உள்ளது.இது போக்குவரத்து ஊழியர்களுக்கு பெரும் சங்கடத்தை தருவது மட்டுமின்றி இதனால் பொது மக்களிடையே அரசு குறித்து கெட்ட மனப்பான்மை உருவாக வாய்ப்பு அளிக்கிறது. இந்த இலவச பயணத்தை நடைமுறைப்படுத்த உடனடியாக போக்குவரத்து நிறுவனங்களுக்கு அரசு துறை உத்தரவிடவேண்டும் என்பதுடன் இந்த திட்டத்தால் போக்குவரத்து துறைகளுக்கு ஏற்படப்போகும் பொருளாதார சுமை குறித்து உடனடியாக கணக்கிட்டு அவற்றிக்கான நிதியுதவியை அரசு முன்னதாகவே போக்குவரத்து துறைகளுக்கு வழங்கவும் வழி வகை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு விஜயகுமார் தெரிவித்தார்.