பஸ்கள் ஓடவில்லை பயணிகள் அவதி


பெங்களூரு, ஏப். 7- பெங்களூர் உட்பட கர்நாடகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று அரசு பஸ்கள் ஓடவில்லை இதனால் பயணிகள் பெரிதும் அவதிக்கு உள்ளானார்கள்.
ஊதிய ஆணைய சிபாரிசுகள் தொடர்பாக மாநில அரசு மற்றும் போக்குவரத்து ஊழியர் சங்ககளுக்கிடையே நடந்துள்ள நீயா நானா போட்டியால் பஸ்களையே நம்பியிருக்கும் பயணிகள் இன்று பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.. போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக பரிசீலித்து ஆறாவது ஊதிய ஆணையம் செய்துள்ள சிபாரிசை ஒப்புக்கொள்ளமுடியாது என அரசு மிகவும் கண்டிப்புடன் அறிவித்துள்ள நிலையில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பஸ் போக்குவரத்துகள் எதுவுமின்றி மக்கள் அலைய வேண்டிவந்தது. பொது மக்களுக்கு ஏற்படும் இன்னல்களை தவிர்க்கும் நோக்கில் தனியார் பஸ்களுக்கு அரசு ஏற்பாடுகள் செய்திருந்தும் பல்வேறு குழப்பங்களுடன் பயணிகள் திண்டாட வேண்டிய நிலை வந்துள்ளது. பிஎம்டிசி பஸ்கள் எதுவும் சாலையில் இறங்காததால் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய ஊழியர்கள், ஆட்டோ வாயிலாகவும் மற்றும் பலர் நடந்து வந்தும் மிக தாமதமாக அலுவலகங்களை சேரும் பரிதாபம் உண்டானது. பஸ் போக்குவரத்தை நிறுத்துவது விஷயமாக தொழிலாளர் சங்கங்களுக்கிடையேயும் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. பஸ் நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்ததை லட்சியம். செய்யாமல் பஸ்களை இயக்க முற்பட்ட ஒரு ஓட்டுனருக்கு பொது மக்கள் சால்வை போர்த்தி மரியாதை செய்ததும் தெரியவந்துள்ளது. இந்த பஸ் ஊழியர் போராட்டத்தின் விளைவாய் நகரில் தினசரி பலவேறு பணிகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்ல பஸ்களையே நம்பியிருந்த மக்கள் வேறு உபாயங்கள் தேடி அலைந்தது பரிதாபமாக இருந்தது. பஸ் ஊழியர் வேலை நிறுத்தத்தால் நகரின் மெஜஸ்டிக், சாட்டிலைட் உட்பட அனைத்து பஸ் நிலையங்களும் வெறிச்சோடியிருந்தன. வெறும் விரல் எண்ணிக்கை அளவிற்கே மாநிலங்களுக்கிடையேயான பஸ்கள் சென்றன. ஆனாலும் காலை சீக்கிரம் வந்தால் பஸ் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பஸ் நிலையங்களுக்கு வந்திருந்த மக்கள் பெரும் ஏமாற்றத்தையே சந்திக்க வேண்டி வந்தது. நகரில் தினமும் 30 லட்சம் மக்கள் பிஎம்டிசி பஸ்களை நம்பியிருப்பதுடன் கே.எஸ்.ஆர்.டிசி வடகிழக்கு மற்றும் மாநில போக்குவரத்துக்கு சொந்தமான மற்ற போக்குவரத்துக்கு கழக பஸ்கள் உட்பட 70 லட்சம் முதல் 80 லட்சம் பயணிகள் பஸ் நிறுத்தத்தால் அவஸ்தைகளுக்குள்ளாகியுள்ளனர். நகரின் பஸ் நிலையங்களில் பஸ்கள் நின்ற இடத்திலேயே நிறுத்தப்பட்டிருப்பதுடன் இந்த பஸ்கள் புறப்படும் என வெகு நேரம் காத்திருந்து ஏமாந்த பயணியரின் முகம் பதட்டமடைந்ததும் தெரியவந்தது சில தொழிலாளர்கள் ஊர்களுக்கு செல்ல முடியாமல் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தனர். சாந்திநகர் பஸ் நிலையத்தில் தனியார் பஸ்களுக்கு மக்கள் முண்டியத்து ஓடி இடம் பிடிக்கும் பரிதாபமும் அரங்கேறியுள்ளது. ஊருக்கு சென்றால் போதும் என்ற ஆதங்கத்தில் கொரோனா நியமங்களை பற்றி யாரும் அக்கறை கொண்டதாக தெரியவில்லை. பஸ் நிலையங்களுக்கு வேறு ஊர்களில் இருந்து வந்த பயணிகளும் தங்கள் இடங்களை சேர தனியார் வாகனங்களுக்காக அலைந்தனர். பெங்களூரு, கோலார், மண்டியா, ஹூப்ளி, பாகல்கோட் உட்பட பல மாவட்டங்களிலிருந்து வந்த பயணிகள் தனியார் பஸ் ஆட்டோ மற்றும் கேப் நோக்கி படையெடுத்தனர். இந்த பஸ் போக்குவரத்து நிறுத்தத்தால் எசவந்தபுரம் கோருகுண்டேபாள்யா, பீன்யா உட்பட பெரும்பாலும் அனைத்து பகுதிகளிலும் பயணிகள் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். கொப்பலா, துமகூரு, ஹாவேரி, மண்டியா, பாகல்கோட்டே, சித்ரதுர்கா, ராம்நகர், நெலமங்கலா, யாத்கிரி, கோலார் உட்பட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மாநில பஸ் போக்குவரத்து ஊழியர் பணிக்கு வராததால் போக்குவரத்தில் பெரும் தொந்தரவுகள் உண்டாகியுள்ளது. பிதாரில் 40 சதவிகித பஸ்கள் மட்டுமே இயங்கின. ஊழியர்கள் பணிக்கு வரப்போவதில்லை என்பது உறுதியானவுடனேயே பெங்களூருவில் மெஜஸ்டிக் போன்ற பஸ் நிலையங்களுக்கு அருகில் தனியார் பஸ்கள் வந்து குவிய தொடங்கின. இதே வேளையில் நகரின் மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த ஒரு மாற்று திறனாளி மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவமும் நடந்துள்ளது. இறந்தவர் ஆனேகல்லின் சிக்கன ஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. ஜிகினி யிலிருந்து மெஜஸ்டிக் பஸ் நிலையம் வந்த அவர் தனக்கு அயர்வாக இருப்பதாக
பிஎம்டிசி ஊழியர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் அந்த ஊழியர் அவருக்கு தேநீர் வாங்கிக்கொடுத்துள்ளார். ஆனால் சிலவே நிமிடங்களில் அவர் உட்கார்ந்த இடத்திலேயே மாரடைப்பால் இறந்து போனார். உடனே அங்கிருந்த போலீசார் இறந்தவருடைய மருமகனுக்கு போன் போட்டு விஷயத்தை தெரிவித்தனர். பின்னர் இறந்தவருடைய உடல் விக்டோரியா மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.