
திருப்பதி:அக் 4-
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் நடந்தது. அப்போது கடந்த 24-ம் தேதி திருமலையில் பக்தர்களின் வசதிக்காக இயக்கப்பட்ட இலவச எலக்ட்ரிக் பேருந்து திடீரென காணாமல் போனது. இதுதொடர்பாக தேவஸ்தான அதிகாரிகள் திருமலை போலீஸாரிடம் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று திருப்பதி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அமர்நாத் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பேருந்தை கடத்திச் சென்ற நபரைப் பிடிக்க சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பல நகரங்களில் தனிப்படை தேடியது. இந்நிலையில், நேற்று முன்தினம் திருப்பதி பஸ் நிலையம் அருகே சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் திரிந்து கொண்டிருந்த நபரை போலீஸார் அழைத்து விசாரித்ததில், அவர் தான் பேருந்தை கடத்திய நபர் என தெரியவந்தது.பின்னர் அவரிடம் இருந்து பேருந்தை பறிமுதல் செய்தோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.