பஸ் மீது லாரி மோதி 11 பக்தர்கள் பரிதாப சாவு

லக்னோ: மே. 26 – உத்தரப் பிரதேசத்தின் ஷாஜஹான்பூரில் நின்று கொண்டிருந்த பேருந்தின் மீது லாரி மோதியதில் புனித யாத்திரைக்கு சென்ற 11 பக்தர்கள் உடல் நசுங்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட மாநிலத்தில் உள்ள புனித தலங்களுக்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று ஷாஜஹான்பூரில் குதர் பகுதியில் உள்ள தாபா ஒன்றில் நின்றிருக்கிறது. பேருந்தில் இருந்த சிலர் தாபாவில் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது, கற்களை ஏற்றி வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக பேருந்து மீது மோதியிருக்கிறது.
இந்த விபத்தில் லாரி பேருந்தின் மீது கவிழந்திருக்கிறது. லாரியில் இருந்த கற்கள் பேருந்தின் மீது விழுந்துள்ளன. இதனால் சம்பவ இடத்திலேயே 11 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். பேருந்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் சீதாபூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று காவல் துறையினர் தெரிவித்திருக்கின்றனர். இந்த விபத்து குறித்து ஷாஜஹான்பூரில் எஸ்பி அசோக் குமார் மீனா கூறுகையில், “சீதாபூர் மாவட்டத்தின் கம்லாபூர் காவல் நிலையப் பகுதியில் அமைந்துள்ள ஜெதா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு புனித யாத்திரை செல்ல பேருந்தில் புறப்பட்டிருக்கிறாரகள். வண்டி, ஷாஜஹான்பூரில் குதர் பகுதியில் உள்ள தாபா ஒன்றில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கிறது.
பேருந்தில் இருந்தவர்கள் சிலர் உணவு சாப்பிட தாபாவுக்குள் சென்றிருக்கிறார்கள். சிலர் பேருந்தின் உள்ளேயே அமர்ந்திருக்கின்றனர். இப்படி இருக்கும்போது திடீரென கற்களை ஏற்றி வந்த லாரி ஒன்று பேருந்தின் மீது மோதியுள்ளது. இதில் லாரி முழுவதுமாக பேருந்தின் மீது கவிழ்ந்தது. எனவே சம்பவ இடத்திலேயே 11 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.
10 பேரை நாங்கள் படுகாயங்களுடன் மீட்டிருக்கிறோம். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என கூறியுள்ளார். இந்த விபத்து உத்தரப் பிரதேசம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். மட்டுமல்லாது விபத்து நடந்த இடத்தில் ஏற்கெனவே விபத்துக்கள் நடைபெற்றிருப்பதால் இந்த பகுதியில் விபத்து தடுப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.