பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு- இம்ரான் கான் கண்டனம்

இஸ்லாமாபாத்: மே 27
பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை லிட்டருக்கு 30 ரூபாய் உயர்த்தி ஷபாஸ் ஷெரீப் அரசு அறிவித்துள்ளது.
இதன் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 179 ரூபாய் 86 காசுகளாக விற்பனையாகிறது.
டீசல் ஒரு லிட்டர் 174 ரூபாய் 15 காசுகளாக உயர்ந்துள்ளது. மண்ணெண்ணெய் விலை ஒரு லிட்டர் 155 ரூபாய் 56 காசுகளாக உள்ளது.இது தொடர்பாக இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தானின் நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில், பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்துவதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை என்றார்.
விலை உயர்த்தப்பட்ட பிறகும், நாங்கள் டீசலுக்கு லிட்டருக்கு 56 ரூபாய் இழப்பை சந்திக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.இந்நிலையில், பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானை ஆளும் மோசடி கும்பலால் நாடு பெரும் பணவீக்கத்தை சந்திக்கும் என்று அவர் எச்சரித்தார்.ரஷிவுடன் 30 சதவீத மலிவான விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி ஒப்பந்தத்தை தமது அரசு மேற்கொண்டதாகவும், ஆனால் ஷபாஸ் ஷெரீப் அரசு அதை தொடரவில்லை என்றும் கூறினார். ஆனால் அமெரிக்காவின் கூட்டாளியான இந்தியா, ரஷியாவிடம் இருந்து மலிவான விலையில் கச்சா எண்ணையை வாங்குவதன் மூலம் எரிபொருள் விலையை கட்டுக்குள் வைத்திருப்பதாகவும் இம்ரான்கான் பாராட்டு தெரிவித்துள்ளார்.