பாகிஸ்தானில் முடிவுக்கு வருகிறதா இம்ரான் கானின் ‘அரசியல்’ சகாப்தம்?

டெல்லி பிப்.2
அரசு ரகசியங்களை வெளியிட்ட குற்றத்துக்காக முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம். இந்த நிலையில், பரிசுப்பொருள் தொடர்பான தோஷகானா வழக்கில் அவருக்கும் அவரது மனைவிக்கும் 14 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்துள்ளது அந்நாட்டு நீதிமன்றம். வரும் பிப்ரவரி 8-ம் தேதி பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில், பழிவாங்கும் நடவடிக்கையாக அடுத்தடுத்த வழக்கில் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
பாகிஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு பிரதமரானார் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரீக்-இ-இன்சாப்(பிடிஐ) கட்சியின் தலைவரான இம்ரான் கான். 2022-ம் ஆண்டு பிரதான கூட்டணி கட்சிகளான பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி), பாகிஸ்தான் முஸ்லீம் லீக் – நவாஸ்(பிஎம்எல்-என்) தங்கள் ஆதரவைத் திரும்பப் பெற்றன. மேலும், அந்நாட்டின் ராணுவமும் இம்ரான் கானுக்கு கொடுத்த ஆதரவை விலக்கிக் கொண்டது. இதனால், இம்ரான் கான் நாடாளுமன்றத்துக்கு உள்ளும் வெளியிலும் முற்றிலுமான ஆதரவை இழந்தார். அப்போது, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஆட்சியிலிருந்து இறக்கப்பட்டார்.
அதன்பின், பாகிஸ்தான் ’தேர்தல் ஆணையம்’ தொடர்ந்த பரிசுப் பொருட்கள் தொடர்பான ‘தோஷகானா ஊழல்’ வழக்கில் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டது. பின், மேல்முறையீட்டில் தண்டனை ரத்து செய்யப்பட்டது. ஆனால், தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கப்பட்டது. தற்போது, நாட்டின் ரகசியங்களை வெளியிட்ட ’சைஃபர் கேஸ்’ குற்றத்துக்காக, கடந்த 30-ம் தேதி 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது அந்நாட்டு நீதிமன்றம். ஏற்கெனவே, முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரும் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) கட்சியின் துணைத் தலைவருமான ஷா மஹ்மூத் குரேஷி இதே வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததும் குறிப்பிடத்தக்கது.
நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாகவும், இம்ரான் கானின் பிடிஐ கட்சியின் செய்தித் தொடர்பாளர் கூறினார். மேலும், “இந்த சட்டவிரோத முடிவை நாங்கள் ஏற்க மாட்டோம்” இம்ரான் கானில் வழக்கறிஞர் நயீம் பஞ்சுதா தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தீர்ப்பு வெளியான சில மணி நேரங்களுக்குப் பிறகு, பலுசிஸ்தான் மாகாணத்தில் அரசியல் பேரணி நடந்தது. இதில் நான்கு பிடிஐ கட்சியினர் கொல்லப்பட்டனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர். முதற்கட்ட விசாரணையில் வெடிகுண்டு விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், இதில் ஈடுபட்டது யார் என்று தெளிவாக தெரியவில்லை என போலீஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஜனவரி 31-ம் தேதி, பாகிஸ்தான் ஊழல் தடுப்பு நிறுவனம் இம்ரான் கானுக்கும் அவரது மனைவி புஷ்ரா பிபி எதிராக மற்றொரு ’தோஷகானா ஊழல்’ வழக்கு தொடுத்தது. இதில்தான் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது நீதிமன்றம். 10 ஆண்டுகளுக்கு அரசு பதவிகளில் இருக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.