
இஸ்லாமாபாத்: செப். 1-
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 100 ஆண்டுகள் பழமையான இந்து கோயில் ஒன்று இடிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நரோவால் மாவட்டத்தின் சிராஜ் கிராமத்தில் அமைந்திருந்த இந்த கோயில், கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி இடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, மதரஸாவுக்கு இடம் பயன்படுத்த திட்டமிட்டு கோயிலை இடித்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
உள்ளூர் இந்து அமைப்புகள், கோயிலை திட்டமிட்டு இடித்ததாகக் கூறியுள்ளன. ஆனால், பாகிஸ்தான் அரசு கனமழையால் கோயில் இடிந்து விழுந்ததாக தெரிவித்துள்ளது. பிஎம்எம்பி தலைவர் அஸ்லாம் பர்வேஸ் சஹோத்ரா, டிஎல்பி அமைப்பைச் சேர்ந்தவர்கள் கோயிலை திட்டமிட்டு இடித்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
சஹோத்ரா, பஞ்சாப் கூடுதல் உள்துறை செயலரிடம் மனு அளித்து, சம்பவத்துக்கு காரணமானவர்களை எதிர்த்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார். மதரஸா தரப்பு, குத்தகை ரத்து செய்யப்பட்ட நிலத்தில் செயல்படுவதாகவும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சஹோத்ரா குற்றம்சாட்டினார்.
அங்குள்ள இந்து தலைவர் ரத்தன் லால், “கோயில் நிலத்தை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை” என்று தெரிவித்தார். பாகிஸ்தான் அரசு, கோயில் இடித்த குற்றச்சாட்டுகளை மறுத்து, கனமழை காரணமாக கோயில் இடிந்தது என தெரிவித்துள்ளது.
லாகூரில் இருந்து சுமார் 130 கி.மீ தொலைவில் உள்ள நரோவால் மாவட்டத்தின் சிராஜ் கிராமத்தில் பழமையான இந்து கோயில் ஒன்று அமைந்திருந்தது. சுமார் 1,000 சதுர மீட்டர் பரப்பளவில் இருந்த இந்த கோயில் 100 முதல் 125 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது. இந்த கோயில் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி திடீரென இடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும், காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வரலாற்று சிறப்புமிக்க கோயிலை மீண்டும் கட்ட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.












