
புதுடெல்லி, அக். 20- இந்திய கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், பாகிஸ்தானுக்கு தூக்கமில்லா இரவுகளை கொடுத்தது என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை இந்திய ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில்,
இந்த ஆண்டு கோவா மற்றும் கர்நாடகாவின் கார்வார் கடற்கரையில் ஐஎன்எஸ் விக்ராந்த்தில் கடற்படை வீரர்களுடன் தீபாவளி திருநாளைக் கொண்டாடினார்.அப்போது கடற்படை வீரர்கள் மத்தியில் உரையாற்றிய நரேந்திர மோடி, “இன்று ஒரு அற்புதமான நாள். இந்த காட்சி மறக்க முடியாதது. இன்று, எனது ஒரு பக்கத்தில் கடல் உள்ளது. மறுபக்கத்தில், இந்திய தாயின் துணிச்சலான வீரர்களின் பலம் உள்ளது. ஒரு பக்கம் எல்லையற்ற எல்லைகள் உள்ளன. மறுபக்கம், எல்லையற்ற சக்திகளை உள்ளடக்கிய இந்த மாபெரும் ஐஎன்எஸ் விக்ராந்த் உள்ளது. சூரிய கதிர்களால் கடல் நீரில் ஏற்படும் பிரகாசம், இன்று நமது துணிச்சலான வீரர்களால் ஏற்றி வைக்கப்படும் தீபாவளி விளக்குகளால் ஏற்பட்டுள்ளது. இந்த முறை, கடற்படையின் துணிச்சலான வீரர்களான உங்கள் அவைருக்கும் மத்தியில் இந்த புனித தீபாவளி பண்டிகையை நான் கொண்டாடுவதில் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். என தெரிவித்தார்.















