பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா; வாழ்த்து மழையில் வீரர்கள்

துபாய், ஆகஸ்ட். 29 –
ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்டில் துபாயில் நேற்று இரவு அரங்கேறிய 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் (ஏ பிரிவு) மோதின. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 147 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 19.4 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பாக பேட்டிங் செய்தது மட்டுமின்றி, 3 விக்கெட்டுகளை வீத்திய ஹர்திக் பாண்டியா ஆட்ட நாயகன் விருது வென்றார். இந்நிலையில், பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி, முன்னாள்
இந்திய கிரிக்கெட் வீரர்கள், பல்வேறு நாட்டு கிரிக்கெட் வீரர்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்திய அணியின் வெற்றியை ரசிகர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.