பாகிஸ்தான் ஜிந்தாபாத் பிஜேபி குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் மறுப்பு

பெங்களூரு, பிப். 28: கர்நாடக ராஜ்யசபா தேர்தலில் கட்சித் தலைவர் நசீர் ஹுசைன் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் போது, சட்டசபைக்குள் காங்கிரஸ் தொண்டர்கள் “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” கோஷங்களை எழுப்பியதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரஸ் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்தது. காங்கிரஸ் தொண்டர்கள் ஹுசைனின் வெற்றிக்காக‌ மட்டுமே கோஷங்களை எழுப்பினார்கள் என்றும், பாஜக‌ கூறுவதில் உண்மை இல்லை என்றும் தெரிவித்தது.
ராஜ்யசபா தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா, “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்று கோஷம் எழுப்பியதாக‌ குற்றம் சாட்டி, ஹுசைனின் வெற்றியைக் கொண்டாடும் காங்கிரஸ் கட்சியினரின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
“காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் அரசியல் செயலாளரும், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருமான‌ நசீர் ஹுசைன்,
கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷங்கள் எழுப்பப்பட்டன. காங்கிரசின் பாகிஸ்தான் மோகம் ஆபத்தானது. இது இந்தியாவை வேறு திசை நோக்கி அழைத்துச் செல்வதை எங்களால் தாங்க முடியாது என்று மாளவியா தெரிவித்தார்.மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், கர்நாடக தலைவர் சி.டி.ரவி உள்ளிட்ட பல பாஜக தலைவர்களும் இதே கோரிக்கையுடன் வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.
பாஜகவின் கூற்றை நிராகரித்த காங்கிரஸ் தலைவர் நசீர் உசேன், ‘நசீர் ஹுசைன் ஜிந்தாபாத்,’ ‘காங்கிரஸ் கட்சி ஜிந்தாபாத்,’ ‘நசீர் கான் ஜிந்தாபாத்,’
மற்றும் ‘நசீர் சாப் ஜிந்தாபாத்’ போன்ற முழக்கங்களை மட்டுமே எழுப்பியதாக தெரிவித்தார்.
“ஊடகங்களில் எதைக் காட்டினார்கள் என்பதை நான் பார்க்கவில்லி, கேட்கவுமில்லை. நான் அதைக் கேட்டிருந்தால், நான் எதிர்ப்பு தெரிவித்திருப்பேன், கண்டித்திருப்பேன்.
ஒரு வேளை அப்படி யாரேனும் கோஷம் எழப்பி இருந்தால், அவர்கள் மீது தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதற்கிடையில், இந்திய இளைஞர் காங்கிரஸின் தேசியத் தலைவர் ஸ்ரீனிவாஸ் பி.வி, பாஜகவின் கூற்றுக்களை நிராகரித்தார், கட்சித் தொண்டர்கள் உண்மையில் வீடியோவில் “நசீர் சாப் ஜிந்தாபாத்” என்று கூறுகிறார்கள் என்று கூறினார்.
பாஜக பொய் சொல்கிறது என்று குற்றம் சாட்டிய ஸ்ரீனிவாஸ் பிவி, காவி கட்சியினர் “நசீர் சாப் ஜிந்தாபாத்” என்பதனை “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்று குழப்ப முயற்சிப்பதாகக் தெரிவித்தார். பாஜக தலைவர்கள் செவ்வாய்க்கிழமை மாலை போலீசில் புகார் அளிக்கச் சென்றாலும், பெங்களூரு காவல்துறை இந்த விஷயத்தை தானாகப் புரிந்துகொண்டு, 153-வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.