“பாகிஸ்தான் ஜிந்தாபாத்” – ரசிகரின் முழக்கத்தை தடுத்த காவலர்

பெங்களூரு, அக். 21- நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் விளையாடின.
இந்தப் போட்டியை மைதானத்தில் நேரில் பார்த்த ரசிகர் ஒருவர் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என முழக்கமிட்டுள்ளார்.அதையடுத்து அவ்வாறு முழக்கமிட வேண்டாம் என மைதானத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஒருவர் சொன்னதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ‘நான் ஏன் அப்படி சொல்லக்கூடாது. களத்தில் விளையாடுவது பாகிஸ்தான் அணி. நான் வேறு என்ன சொல்ல வேண்டும்?’ என அந்த ரசிகர் காவலரிடம் தெரிவித்துள்ளார்.
இது வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ரசிகர்கள் பலரும் தங்கள் கருத்தை சொல்லி வருகின்றனர்.
கடந்த 14-ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானை நோக்கி ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற முழக்கம் இடப்பட்டது. அது சர்ச்சையானது. இந்த சம்பவம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் பாகிஸ்தான் புகார் தெரிவித்தது. பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா. தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் தோல்வியை தழுவியுள்ளது.
அடுத்ததாக சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணியுடன் விளையாட உள்ளது.