பாகிஸ்தான் பிரதமராகிறார் ஷெபாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத்: பிப்.14- பாகிஸ்தானில் சமீபத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி ஆட்சியை நடத்த நவாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ ஆகியோர் முன்வந்துள்ளனர். புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளம், தொடர்ச்சியாக நீடித்து இருக்கும் பொருளாதார நெருக்கடி என பாகிஸ்தான் கடும் பாதிப்புகளை சந்தித்து வந்தது. இதன் தொடர்ச்சியாக, அதன் பிரதமர் இம்ரான் கான் மீது எழுப்பப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு, நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி என அரசியல் பேரிடரிலும் பாகிஸ்தான் சிக்கியிருந்தது. இதிலிருந்து நாடு மீள நாடாளுமன்ற பொதுத்தேர்தலை நடத்துவதுதான் ஒரே வழி என தேர்தல் அறிவிக்கப்பட்டது.
தேர்தலுக்கு ஒரு நாளைக்கு முன்னர் இரட்டை குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததால், தேர்தல் அமைதியான முறையில் நடத்தப்படுமா? என்கிற கேள்வி எழுந்தது. இருப்பினும் நாடு முழுவதும் இன்டெர்நெட் சேவை முடக்கப்பட்டு தேர்தல் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டது. அந்நாட்டின் சட்ட விதிகளின்படி, தேர்தல் முடிந்து அடுத்த 14 நாட்களுக்குள் அதன் முடிவுகளை அறிவித்துவிட வேண்டும்.
வாக்கு எண்ணிக்கையில் சற்று தொய்வு இருந்தாலும், ரிசல்ட் 3 நாட்களுக்கு பிறகு அறிவிக்கப்பட்டுவிட்டது. அதன்படி எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தம் 854 தொகுதிகளில் நாடாளுமன்ற மற்றும் மாகாண தேர்தல் நடந்தது. இம்ரான் கான் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் 91 தொகுதிகளை கைப்பற்றியுள்ளனர். இவர்கள் அனைவரும் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் தெஹ்ரிக் இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கானின் பிடிஐ கட்சியை சேர்ந்தவராவார்கள். கட்சியின் கிரிக்கெட் பேட் சின்னம் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் சுயேச்சையாக களமிறங்கியிருந்தனர். அதேபோல நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சி 71 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 53 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக யாருக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை. எனவே, கூட்டணி ஆட்சியை நட்டத்த நவாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ ஆகியோர் முன்வந்துள்ளனர். புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.