பாகிஸ்தான் முன்னால் வீரர்கள் குற்றச்சாட்டுக்கு முகமது ஷமி பதிலடி

மும்பை, நவ. 22- இந்திய அணி பவுலிங் செய்யும் போது பந்தை மாற்றுகிறார்கள் என்ற பாகிஸ்தான் முன்னாள் வீரர்களின் குற்றச்சாட்டுகளை நினைத்து சிரிப்பு வருவதாக முகமது ஷமி பதிலடி கொடுத்துள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் பல்வேறு சாதனைகளை படைத்ததன் மூலமாக இந்திய அணியின் முகமது ஷமி இளைஞர்கள் மத்தியில் ஹீரோவாக கொண்டாடப்பட்டு வருகிறார். 48 ஆண்டுகள் உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக 50 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை சொந்தமாக்கியுள்ளார் முகமது ஷமி. நடப்பு உலகக்கோப்பை தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணியின் முகமது ஷமி மொத்தமாக உலகக்கோப்பை வரலாற்றில் 55 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலம் இந்தியாவில் இளைஞர்கள் வேகப்பந்துவீச்சாளர்களாக உருவாக வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் முகமது ஷமியின் விளம்பர வருவாயும் அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் ஜாம்பவான் வீரர்களை ஒப்பந்தம் செய்து வரும் பூமா நிறுவனம், முகமது ஷமியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் விராட் கோலி, சுனில் சேத்ரி, ஹர்மன்ப்ரீத் கவுர் உள்ளிட்டோர் பூமா நிறுவனத்தின் விளம்பர தூதராக செயல்பட்டு வருகின்றனர். தற்போது இந்திய பட்டியலில் முகமது ஷமியும் இணைந்துள்ளார். இந்த நிலையில் பூமா நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில் முகமது ஷமி, உலகக்கோப்பை தொடரில் முதல் போட்டியில் களமிறங்கி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினேன். அதன்பின் அடுத்த போட்டியில் மீண்டும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினேன். அதேபோல் மற்றொரு போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினேன். அதன்பின் பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான்களில் ஒருவரான வாசிம் அக்ரம் அவர்களுக்கு சில கருத்துகளை எடுத்து கூறினார். அப்போது அவர்களால் ஏற்க முடியவில்லை. அவர்களை நினைத்தால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது. இப்படியெல்லாம் கிரிக்கெட்டில் நடக்க வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளார். முகமது ஷமி பேச்சு சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.