பாகிஸ்தான் ராணுவம் சரமாரிதுப்பாக்கிச் சூடு – இந்திய வீரர் படுகாயம்

சோபியான்: நவ.9- காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் நடந்த என்கவுன்ட்டரில் தீவிரவாதி ஒருவர் பாதுகாப்புப் படையினரால் கொலை செய்யப்பட்டார். கொல்லப்பட்ட தீவிரவாதி மைசர் அகமது தர் என்று அடையாளம் தெரிந்துள்ளது. இவர், ‘தி ரெஸிஸ்டன்ஸ் ப்ரண்ட்’ என்ற இயக்கத்துடன் தொடர்புடையவராக அறியப்படுகிறார்.
இது ஒருபுறம் இருக்க சம்பா மாவட்டம் ராம்கர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் காயமடைந்தார். சம்பா மாவட்டத்தில் கடந்த 24 நாட்களில், எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்ததை மீறி நடந்துள்ள 3வது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை தொடர்கிறது. ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த உமர் அமீன், தெற்கு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தைச் சேர்ந்த இவரை பாதுகாப்புப் படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
முன்னதாக கடந்த செவ்வாய்க் கிழமை காஷ்மீர் காவல்துறை சார்பில் ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், அண்மையில் காஷ்மீரில் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளியும், ஒரு காவலரும் கொல்லப்பட்டனர். அச்சம்பங்களில் தொடர்புடையவர்கள் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.