பாஜகவினர் கைதுக்கு கண்டனம்

சென்னை: நவ.2- சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகில் கடந்த 20-ம் தேதி பாஜக கொடி கம்பம் நடப்பட்டது. இதனை போலீஸார் அப்புறப்படுத்தினர். இதனால், பாஜகவினருக்கும், போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
மேலும், கொடிக் கம்பத்தை அகற்ற வந்த ஜேசிபி வாகனமும்சேதப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக, பாஜக விளையாட்டு பிரிவு மாநில தலைவர் அமர்பிரசாத் ரெட்டிஉட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், போலீஸார் நடத்திய தடியடியில் பாஜக நிர்வாகி விவின் பாஸ்கர் காயமடைந்தார்.
இதைத்தொடர்ந்து , இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் 10,000 கொடிக் கம்பங்கள் நடப்படும் என மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.
நவ.1-ம் தேதி முதல் ஒவ்வொரு நாளும் 100 கொடிக் கம்பங்கள் நடப்படும் என்றும், 100-வது நாளானபிப்.8-ம் தேதி பனையூரில் கொடிக் கம்பம் அகற்றப்பட்ட அதே இடத்தில், போலீஸ் தடியடியில் காயமடைந்த விவின் பாஸ்கர் முன்னிலையில் கொடிக் கம்பம் நடப்படும் என்றும் அண்ணாமலை அறிவித்திருந்தார். அதன்படி, நேற்று தமிழகம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜகவினர் கொடிக் கம்பம் நடும் பணியை மேற்கொண்டனர்.
சென்னையை பொறுத்தவரை திருவொற்றியூர், ராயபுரம், ஆர்கே நகர், கொளத்தூர், மதுரவாயல், மாதவரம், அம்பத்தூர், ராமாபுரம் உட்பட 42 இடங்களில் மாவட்ட தலைவர்கள் ஏற்பாட்டில் கொடிக் கம்பம் நடும் நடவடிக்கையை பாஜகவினர் மேற்கொண்டனர். ஆனால்,மாநகராட்சி மற்றும் காவல் துறைஅனுமதியின்றி கொடிக் கம்பம் நடமுயன்றதாக போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், சில இடங்களில் போலீஸாருக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து போலீஸார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். சில இடங்களில் மட்டும் பாஜகவினர் பழைய கொடிக் கம்பங்களை பிடுங்கி, புதிய கொடிக்கம்பங்கள் நட்டதாக தெரிகிறது.இதனால், அதற்கு மட்டும் போலீஸார் அனுமதி அளித்துள்ளனர்.
தஞ்சாவூர், திருவாரூர், கோவை, திண்டுக்கல் உட்பட தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கொடிக் கம்பம் நட முயன்ற பாஜகவினரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.