பாஜகவின் ஆணவம்.. 241 இடங்களை மட்டுமே தந்த “ராமர்”- விளாசியது ஆர்.எஸ்.எஸ்

ஜெய்ப்பூர், ஜூன் 14- லோக்சபா தேர்தலில் பாஜகவின் ஆணவம், அகம்பாவத்தால்தான் கடவுள் ராமர் வெறும் 241 இடங்களை மட்டுமே கொடுத்துள்ளார் என அக்கட்சியின் தாய் அமைப்பான் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான இந்திரேஷ் குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக உ.பி. உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் தேர்தல் பணியாற்றவில்லை என முன்னரே கூறப்பட்டது. ஒரு கட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலே இல்லாமல் பாஜக தனித்தே இயங்கும் அளவுக்கு விஸ்வரூபம் பெற்றுள்ளது என பாஜகவின் தலைவர் ஜேபி நட்டாவும் பேசினார்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கோட்டையான நாக்பூரில் பாஜகவின் நிதின் கட்காரியை தோற்கடிக்க டெல்லி பாஜக மேலிடத் தலைவர்கள் குழு சதித் திட்டம் தீட்டியதாகவும் கூறப்பட்டது. இவ்வளவு அக்கப்போர்களுக்கு பின்னர் பாஜக பெரும்பான்மை பெற முடியாமல் வெறும் 240 இடங்களில்தான் வெல்ல முடிந்தது.
இதனையடுத்து ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர் மோகன் பகவத் வெளிப்படையாக பாஜகவின் அகம்பாவம்- ஆணவப் போக்கை விமர்சித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ். தேசிய செயற்குழு உறுப்பினரான இந்திரேஷ் குமாரும் பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
ஜெய்ப்பூர் நிகழ்ச்சியில் பாஜக, காங்கிரஸ் பெயர்களைக் குறிப்பிடாமலேயே இந்திரேஷ் குமார் பேசியதாவது: ஒரு கட்சிக்கு கடவுள் ராமர் மீது அதீத பக்தி. ஆனால் அந்த கட்சிக்கு அகம்பாவமும் ஆணவமும் வந்துவிட்டது. இதனால்தான் அந்த கட்சிக்கு அதிக இடங்கள் தராமல் வெறும் 241 இடங்களுடன் நிறுத்திவிட்டார் கடவுள் ராமர். கடவுள் ராமர் மீது நம்பிக்கை இல்லாதவர்கள், ராமருக்கு எதிராக முழக்கமிடுகிறவர்களுக்கு 234 இடங்கள் மட்டுமே கொடுத்து அவர்களையும் தடுத்து நிறுத்தியவர் கடவுள் ராமர்தான். ராமர் ஒருவரையும் கைவிடமாட்டார்.
ராமர் நிச்சயம் நீதியைத்தான் வழங்குவார்.
கடவுள் ராமர் மக்களைப் பாதுகாக்கிறவர்; ராவணனுக்குக் கூட நல்லது செய்திருக்கிறார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு இந்திரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பாஜக, இந்தியா கூட்டணியின் பெயர்களை இந்திரேஷ் குமார் குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சித்தாலும் பாஜக தலைவர்கள் கடும் கொந்தளிப்புடன் இருப்பதாக கூறப்படுகிறது.