பாஜகவின் கைப்பாவையாக செயல்படுகிறது சிபிஐ: அகிலேஷ் யாதவ் விமர்சனம்

லக்னோ, மார்ச் 1- கடந்த 2012-16 காலகட்டத்தில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தர பிரதேசமுதல்வராக பதவி வகித்தார். அப்போது, சுரங்க குத்தகை சட்ட விரோதமாக நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த அலகாபாத்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்தொடர்ச்சியாக 2019-ம் ஆண்டுசிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் அகிலேஷ் யாதவ் சாட்சியாக சேர்க்கப்பட்ட நிலையில், சாட்சி விசாரணைக்கு பிப்ரவரி 29-ம் தேதிக்குள் ஆஜராகும்படி அவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. இதுகுறித்து அகிலேஷ் யாதவ் நேற்று கூறுகையில், “பாஜகவின் கைப்பாவையாக சிபிஐ செயல்படுகிறது. சமாஜ்வாதியை குறிவைத்து பாஜக இயங்குகிறது. 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் சமயத்தில் எனக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.தற்போது அடுத்த தேர்தல் வந்துவிட்டது. இப்போது மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எப்போதெல்லாம் தேர்தல் வருகிறதோ, அப்போதெல்லாம் எனக்கு நோட்டீஸ் வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் நிறைய முன்னெடுப்புகளை செய்ததாக சொல்லும் பாஜக, ஏன்தேர்தல் நெருங்கும் சமயத்தில் எங்களைப் பார்த்து பயப்படுகிறது” என்றார்.