பாஜக நிர்வாகிகளுக்கு ரூ. 2 லட்சம் பரிசு

அகர்தலா, ஏப். 24- வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் பாஜக நிர்வாகிகளுக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று திரிபுரா மாநில அமைச்சர் ரத்தன் லால் நாத் தெரிவித்துள்ளார். திரிபுரா மாநிலம் கோவாய் சட்டப் பேரவைத் தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டவர் அமைச்சர் ரத்தன் லால். இந்நிலையில் வரும் மக்களவைத் தேர்தலுக்கான, கிழக்கு திரிபுரா தொகுதி பாஜக நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு அமைச்சர் ரத்தன் லால் பேசியதாவது: நமது கோவாய் பேரவைத் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி நிர்வாகிகள், ஏஜெண்டுகள் சிறந்த முறையில் பணியாற்றி பாஜக வேட்பாளரை வெற்றி பெறச் செய்யவேண்டும். தங்களது வாக்குச்சாவடியில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும் பாஜக நிர்வாகிகளுக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும். இதற்காக பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் சிறந்த முறையில் தொண்டாற்ற வேண்டும். கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதியில் அடங்கியுள்ள கோவாய் பேரவைத் தொகுதியில் 52 வாக்குச்சாவடிகள் உள்ளன.இந்த 52 வாக்குச்சாவடிகளில் அதிக அளவில் வாக்குகள் விழுவதை பாஜக நிர்வாகிகள் உறுதி செய்யவேண்டும். வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும் வாக்குச்சாவடி குழுவினருக்கு நானே எனது சொந்தப் பணத்திலிருந்து ரூ.2 லட்சம் பரிசு தருகிறேன். மோசடி மூலம் அரசியல் செய்ய நான் விரும்பவில்லை.நீங்கள் உங்கள் விருப்பப்படி வாக்கு செலுத்தலாம். ஆனால் பாஜகவை விட நல்ல கட்சி ஏதாவது இருக்கிறதா என்று எனக்கு சொல்லுங்கள். கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இண்டியா கூட்டணிக் கட்சி வேட்பாளர் டெபாசிட் இழப்பார். இவ்வாறு அவர் கூறினார்.