பாஜக; பேரம் பேசுவதாக சமாஜ்வாதி புகார்

புதுடெல்லி, பிப். 27- நாடு முழுவதும் இன்று (பிப்.27) 13 மாநிலங்களில் மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் உத்தர பிரதேசத்தில் பாஜக – சமாஜ்வாதி இடையேயான போட்டா போட்டி கவனம் பெற்றுள்ளது. அங்குள்ள 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில் 7 இடங்களில் பாஜக எளிதாகக் கைப்பற்றும் என்று ஏற்கெனவே கணிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 3-ஐ சமாஜ்வாதி கைப்பற்றுமா இல்லை பறிகொடுக்குமா என்ற பரபரப்பு கிளம்பியுள்ளது.அகிலேஷின் குற்றச்சாட்டு: முன்னதாக நேற்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அளித்தப் பேட்டியில், “எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் மீது பாஜகவினர் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றனர். இதனால் சிலர் கட்சி மாறி வாக்களிக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அரசாங்கமே இத்தகைய நெருக்கடி ஏற்படுத்துகிறது. இப்படித்தான் இவர்கள் (பாஜக) இயங்குகிறார்கள். அவர்கள் அச்சத்தை ஏற்படுத்துகிறார்கள். மிரட்டல் விடுக்கிறார்கள். பழைய வழக்குகளை சுட்டிக் காட்டி அச்சுறுத்துகின்றனர். விசாரணை அமைப்புகளை ஏவிவிடுகின்றனர். ஆனால் இனியும் இவர்களில் அச்சுறுத்தல்கள் பலிக்காது” என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருந்தார். சமாஜ்வாதி கட்சி சார்பில், நடிகை, எம்பி ஜெயா பச்சன், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அலோக் ரஞ்சன் மற்றும் ராம்ஜி லால் சுமன் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். மொத்தமுள்ள 10 உறுப்பினர்களுக்கு 11 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.