பாஜக 200 இடங்களை தாண்டாது: மம்தா சவால்

கிருஷ்ணாநகர்,ஏப்ரல் 1 –
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக 200 இடங்களைத் தாண்டாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில், கிருஷ்ணாநகர் தொகுதியில் திரிணமூல்காங்கிரஸ் சார்பில் நேற்று தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சி வேட்பாளர் மஹுவா மொய்த்ராவை ஆதரித்து அம்மாநில முதல்வரும் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி பேசியதாவது:
வரும் மக்களவைத் தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என பாஜக கூறிவருகிறது. ஆனால் 200 இடங்களைக் கூட அவர்களால் தாண்ட முடியாது என நான் சவால் விடுக்கிறேன்.
கடந்த 2021-ல் நடந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் வெற்றிபெறுவோம் என பாஜக தெரிவித்தது. ஆனால், வெறும் 77 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
இந்திய குடிமக்களை வெளிநாட்டினராக மாற்றுவதற்கான மத்திய அரசின் தந்திரம்தான் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ). எனவே, இந்த சட்டத்தின் கீழ் யாரும் விண்ணப்பம் செய்யாதீர்கள். சிஏஏ சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம்.
மேற்கு வங்கத்தில் ‘இண்டியா’ கூட்டணி இல்லை. இங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும்காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பாஜகவுக்கு சாதகமாக செயல்படுகின்றன. எனவே, வரும் தேர்தலில் மஹுவா மொய்த்ராவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.