பாதியில் முடங்கிய கால்வாய் பணிகள்: வியாபாரிகள் நூதன போராட்டம்

வேலூர், நவ.22-
வேலூரில் கால்வாய் பணி முடிக்காமல் விட்டதற்கு நன்றி தெரிவித்து பேனர் வைத்து வியாபாரிகள் நூதன போராட்டம் செய்தனர். பூஜை செய்து இனிப்புகளும் வழங்கினர்.
வேலூர் மாநகரில் பல்வேறு இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி வேலூர் மண்டித்தெரு, லாங்கு பஜாரில் கடந்த 6 மாதங்களாக கால்வாய் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் பணிகளை முழுமையாக முடிக்கவில்லை. பணிகள் முழுமை பெறாததால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். அப்பகுதி வியாபாரிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி வியாரிகள் சார்பில் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் மனஉளைச்சல் அடைந்த வியாபாரிகள், கால்வாய் பணியை முடிக்காமல் ஆபத்தான நிலையில் விட்டுச் சென்றதற்கு நன்றி என கூறி கிருபானந்த வாரியார் சாலை வியாபாரிகள் மற்றும் பா.ஜ.க சார்பில் மார்க்கெட் அருகே பேனர் வைத்து நூதன போராட்டம் நடத்தினர்.
இதில், பா.ஜ.க. மண்டல தலைவர் மோகன், வணிகப்பிரிவு மாவட்ட துணை தலைவர் சிவராமன், செயலாளர் நாகராஜன், மாவட்ட செயலாளர் சரவணகுமார், பொதுச்செயலளர் எஸ்.எல்.பாபு, வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த ஆரிப்பாஷா, பாருக் பாஷா, அஜ்மல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பேனருக்கு, தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி பூஜை செய்தனர். மாநகராட்சியில் செயல்பாடுகளை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் இனிப்புகள் வழங்கினர். அப்போது எதற்காக இனிப்பு வழங்குகிறார்கள் என்று கேட்ட பொதுமக்களிடம் கால்வாய் பணிகளை முடிக்காமல், மூடாமல் போட்டுள்ளனர் அதற்காக தான் இனிப்பு வழங்குகிறோம் என்றனர்.
இந்த சம்பவத்தால் மார்க்கெட் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது. இதுபற்றி தகவல் இருந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.