பாதுகாப்பாக உள்ள இந்திய மாலுமிகள்

நியூயார்க்: மார்ச் 28
சிங்கப்பூரைச் சேர்ந்த கிரேஸ் ஓசன் என்ற நிறுவனத்தின் சரக்கு கப்பல் டாலி. இந்த கப்பலை டென்மார்க்கை சேர்ந்த மார்ஸ்க் என்ற கப்பல் நிறுவனம் வாடகைக்கு எடுத்து இயக்கி வந்தது. இந்த கப்பலை இந்திய மாலுமிகள் குழு இயக்கியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை, இந்த கப்பல் அமெரிக்காவின் பால்டிமோர் பகுதியில் படாப்ஸ்கோ ஆற்றை கடந்து சென்றது. அப்போது கப்பலை இயக்கும் புரொபல்லர் சிஸ்டத்தில் திடீரென பழுது ஏற்பட்டது.
இதனால் கப்பல் கட்டுப்பாட்டை இழந்து நகர்ந்து சென்றதால், அது செல்லும் திசையை கட்டுப்படுத்த முடியவில்லை. பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் மீது மோதும் அபாயத்தை தவிர்க்க நங்கூரத்தை இறக்கி கப்பலை நிறுத்தும் முயற்சியும் பலன் அளிக்கவில்லை.
இதையடுத்து கப்பல் பாலத்தில் மோதும் என்று மாலுமிகள் அபாய எச்சரிக்கை விடுத்தனர். இந்த பாலத்தில் போக்குவரத்தை கண்காணிக்கும் அதிகாரிகள், பாலத்தில் வாகனங்கள் செல்வதை உடனே நிறுத்தினர். சில நிமிடங்களில் அந்த கப்பல் பாலத்தின் தூண் பகுதியில் மோதியது.
இதில் பாலம் உடைந்து ஆற்றில் விழுந்தது. பாலத்தில் ஏற்கெனவே சென்ற வாகனங்கள் ஆற்றில் விழுந்தன. பாலத்தில் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களும் ஆற்றில் விழுந்தனர்.
அங்கு அமெரிக்க கடலோர காவல் படையினர் உடனடியாக மீட்பு பணியில் இறங்கினர். பாலம் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்ட 6 ஊழியர்களை காணவில்லை.
அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சரக்கு கப்பலில் உள்ள இந்திய மாலுமிகள் 22 பேர் பாதுகாப்பாக உள்ளனர்.
இந்த விபத்து காரணமாக, ஆற்றில் மூழ்கிய வாகனங்கள் மற்றும் உயிரிழந்தவர்கள், பாலத்துக்கு ஏற்பட்ட சேதம் ஆகியவற்றுக்கு நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் அளவுக்கு இழப்பீடு கோரப்படலாம் எனத் தெரிகிறது.
கடந்த 1912-ம் ஆண்டு டைட்டானிக் கப்பல் விபத்து ஏற்பட்ட போது, அதன் உரிமையாளர் அப்போது இருந்த 19-ம் நூற்றாண்டு சட்டத்தை பயன்படுத்தி இழப்பீடு வழங்கும் பொறுப்பை குறைத்துக் கொண்டார்.
அது போல் டாலி கன்டெய்னர் கப்பல் உரிமையாளருக்கும், இழப்பீடு பொறுப்பில் இருந்து தப்பிக்க வழி உள்ளதாக சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.