பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 2 பாஜகவினர் 31 ஆண்டுகளுக்கு பின் கைது

பெங்களூர்: ஜன. 2
31 ஆண்டுகளுக்கு முன் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் கைதான பாஜகவை சேர்ந்த 2 நிர்வாகிகள் மீதான பழைய வழக்குகள் கர்நாடக காங்கிரஸ் அரசு மீண்டும் கையில் எடுத்து இருக்கிறது. கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்து இருந்து வரலாற்று பழமைவாய்ந்த பாபர் மசூதியை இந்துத்துவாவினர் இடித்து தரைமட்டமாக்கினர். பல ஆண்டுகளாக இந்த நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கு நடைபெற்று வந்த நிலையில், அந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கி இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், இந்த மாதம் ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற உள்ளது.
இந்த நிலையில் 31 ஆண்டுகளுக்கும் முன் பாபர் மசூதி இடிப்பில் பங்கேற்ற 2 பாஜக நிர்வாகிகளை கர்நாடக போலீஸ் கைது செய்து இருக்கிறது. ஹுப்பாலி பகுதியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டதை பாஜகவினர் கண்டித்து வருகிறார்கள். இருவரும் தற்போது 60 வயதை அடைந்துவிட்ட நிலையில் அரசியல் பழிவாங்கும் நோக்கில் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு இந்த கைது நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதுகுறித்து பேசிய கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோகா, “31 ஆண்டுகள் பழமையான பாபர் மசூதி இடிப்பு வழக்கை மீண்டும் திறந்து இந்து செயற்பாட்டாளர்களை பயங்கரவாதிகளாக காங்கிரஸ் அரசு காட்டுகிறது. கைது செய்யப்பட்ட இருவரும் கற்களை வீசியதாக குற்றம்சாட்டப்பட்டவர்கள். அயோத்தியில் ராமர் கோயில் திறப்புக்காக மக்கள் ஆர்வமுடன் காத்தின்றனர். பிரதமர் நரேந்திர மோடியும் ராமர் கோயில் திறப்பை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கூறி உள்ளார். இந்த கர்நாடக அரசு இத்தகைய செயலில் ஈடுபட்டு உள்ளது.